இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, பிப்ரவரி 18, 2024

கனவெல்லாம் நீ தானே



சிறிது மன அழுத்தத்துடனேயே சாலையில் நடந்துகொண்டிருந்தான் கௌதம். அவன் மனதில் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. செல்லும்வழியில் ஒரு பெட்டிக்கடை தென்படவே, அக் கடைக்குச்சென்று சிகரெட் ஒன்றை வாங்கி, புகைவிட ஆரம்பித்தான். அவனது மனஅழுத்தம் மெல்ல மெல்ல அந்த சிகரெட் அளவை போலவே குறைந்து கொண்டிருந்தது.


அச்சமயத்தில் ஸ்கூட்டரில் ஒரு இளம்பெண் அந்த சாலையின் வழியே வந்தாள். அவள் கௌதமை கடந்து செல்லும் பொழுது, அவளது தலையை அலங்கரித்திருந்த ரோஜாமலர் கீழே விழுந்தது.

"என்னங்க ஒரு நிமிஷம் நில்லுங்க, உங்க ரோஸ் கீழ விழுந்துருச்சு! ஹலோ மேடம்,என கூச்சலிட்டான் கௌதம். ஆனால் அவளுக்கு கேட்காமல் போக, சாலையைக் கடந்து தொலைதூரம் சென்றுவிட்டாள். இருப்பினும் கௌதம் "TN07 RY1192" என்கிற அவளது வண்டி எண்ணை நினைவில் ஏற்றிக் கொண்டான். பின்பு கௌதம் அந்த ரோஜாமலரை விழுந்த இடத்திலிருந்து எடுத்து தன் கைகளில் பிடித்துக் கொண்டான்.

கௌதமின் மன அழுத்தம் மொத்தமாய் மறைந்து ஒருவிதமான புன்னகை அவனது முகத்தில் உண்டானது. அவன் உதடுகளில் சிரிப்பு முத்துக்கள் தென்பட்டன. சிரித்துக்கொண்டே இல்லத்திற்குச் சென்றான்.

கௌதமின் அறைக்கு அவன் தாய் தனலட்சுமி உள்ளே சென்றாள். அங்கே கௌதம் கரங்களில் அந்த ரோஜா மலரை வைத்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். மலரே! மங்கையிடம் கமழ்ந்த ரோஜாமலரே! நீ எந்தன் கைகளில் சேர்ந்தது ஏனோ? யாரந்த மங்கை தானோ?... என ரோஜாமலரிடம் கொஞ்சிக்கொண்டிருந்தான்.


யாருடா அந்த மங்க? உன்ன இப்படி பொலம்ப விட்டுருக்கா.என்னடா நடந்துச்சு.அம்மாகிட்ட சொல்லுடா தம்பி. என தனலட்சுமி அவனிடம் கேட்க,

கௌதம் ஒன்றும் தெரியாதவன்போல், "அம்மா சும்மாயிரும்மா... இது என் ஃபிரெண்ட், அவனோட குறும்படத்துல நடிக்க வாய்ப்பு குடுத்துருக்கான். அதான் ஒத்திகை பாத்துட்டிருக்கேன். நீ போயி சாப்பிட்டு தூங்குமா, நான் அப்புறமா சாப்டுக்குறேன் என்று பதிலளித்தான்.

உன்ன பாத்தா ஒத்திகை பாக்குற மாதிரி தெரியலடா, ஒருத்திய பாத்துட்டு வந்த மயக்கத்துல இருக்குற மாதிரி தெரியுதுடா தம்பி.உங்க அப்பா மாதிரியே நீயும் சமாளிச்சு பேச பழகிட்ட, சரி இருக்கட்டும்! வா சாப்டலாம்...

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா, நீ போய் சாப்டு தூங்குமா...என்று மீண்டும் சொன்னான்.

சரிடா தம்பி, நான் போய் உங்க அப்பாக்கு சாப்பாடு போட்டுக் குடுக்குறேன். நீயும் சாப்ட வந்துரு. சித்தி சீரியல் வேற போட ஆரம்பிச்சுருவான். நேரமாச்சு, நான் போறேன் தம்பியென்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் தனலட்சுமி.

"யாருன்னே தெரியாம?... எப்படி அம்மா கிட்ட சொல்லுறது" என மனதிற்குள் கேள்வி எழுப்பிவிட்டு மீண்டும் ரோஜாமலரிடம் பேச ஆரம்பித்தான் கௌதம். அன்றிரவு அவனுக்கு நீண்ட நேரத்திற்கு பின்னரே உறக்கம் வந்தது. அந்த ரோஜாமலரும் அவனது நெஞ்சருகில் தலைசாய்க்க, ஒருவழியாக உறங்கிவிட்டான் கௌதம். உதித்த கனவில் அந்த ரோஜாமலர் தேவதை ஊர்வலம் வந்தாள். இம்முறையும் அவனால் அவளின் முகத்தை காண இயலவில்லை.

அம்மா! ஒரு காஃபி கொண்டு வாம்மா...என தன் விடியல் பொழுதை சோம்பல்முறித்து தொடங்கினாள் சக்தி.

இதோ வரேன்டி..என சொல்லிவிட்டு பார்வதி ஒரு டம்ளரில் ஆவிபறக்க காஃபி கொண்டுவந்து சக்தியிடம் நீட்டினாள். பார்வதி சிவநேசன் தம்பதியினருக்கு சக்தி ஒரே மகள். செல்லமாக வளர்ந்தவள், குறும்புத்தனம் அவளிடம் என்றும் குடிகொண்டிருக்கும். எல்லோரிடமும் அன்பாய் பழகும் எண்ணம் அவளின் தந்தையை போலவே சக்திக்கும் நிறைந்து காணப்பட்டது.

சக்தி இன்னைக்கு உனக்கு உப்புமா கிளறி வச்சிருக்கேன் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுட்டு இன்டர்வியூக்கு போ...

அத நீயும் உன் ஆளும் சாப்ட்டுகோங்க என கிண்டலடித்துவிட்டு, டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றுவிட்டாள் சக்தி.

நீ அடி வாங்கப்போற...என பார்வதி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

குளியலறையின் உள்ளே, தன் தலையை சுழற்றவேண்டுமென தண்ணீர் குழாயும்,
சக்தியின் தேகத்தை தொட்டுப்பார்க்க தண்ணீரும், அவளது பற்களை வெண்மையாக்க பல்துலக்குவானும், அவளுடன் கரம்கோர்க்க தண்ணீர் கோப்பையும், அவள் சிகையை மென்மையாக்க சாம்பூவும், நாவில் வழுக்கிச்செல்ல நாக்குவழிப்பானும் காத்திருந்தன. அவளைக் கண்டதும், எல்லோருக்கும் அந்த அறையைப் போலவே பளிச்சென்று மின்னிற்று.

தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு சக்தி தனக்கு பிடித்த சிவப்புநிற சுடிதாரை அணிந்தாள். இன்று நீ தான்! இந்த அழகியுடன் வலம்வர கொடுத்து வைத்தவனென நீலநிற சுடிதாரும், வெண்மைநிற சுடிதாரும், சிவப்புநிற சுடிதாரிடம் மனச்சழக்கு கொண்டன.

சக்தி தனது சிகையலங்காரம், முகஅலங்காரம் அனைத்தையும் முடித்துவிட்டு இறுதியாக தலையிலொரு சிவப்புநிற ரோஜாமலரை சூடிக்கொண்டு வெளியேவந்தாள்.

சிவநேசன், சக்தியின் ஸ்கூட்டரை துடைத்துவிட்டு பின் அவளை வாழ்த்த தயாராக நின்றுகொண்டிருக்க,
"இன்டர்வியூ நல்லா பண்ணுமா... ஆல் த வெரி பெஸ்ட்" என சொல்லிவிட்டு ஸ்கூட்டரின் சாவியை கொடுத்தார்.

சக்தி தனது வண்டியை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்கு கிளம்பிவிட்டாள். பின்பு சிவநேசனும் தனது வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்.

கௌதம் இறுதிகட்ட நேர்காணலுக்காக வந்திருந்தான். அங்கே அவனுக்கு வேலை உறுதியாக, மாதம் 25000 ரூபாய் சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டது. மகிழ்வின் உச்சத்திற்கே சென்றுவிட்ட அவன், தன் கனவு நனவானதை முதலில் தன் தாயிடம் சொல்லநினைத்து அலைபேசியை எடுத்தான். அப்பொழுது அவனை யாரோ ஒரு பெண் இடித்துவிட்டு வேகமாக சென்றாள்.

ஹலோ பாத்து போங்க. உங்களால என் ஃபோன் கீழ விழப்பாத்துச்சு...என எரிச்சலாக சொன்னான்.

ஆம்,நேர்காணலுக்கு நேரமாகிவிட்டதால் சக்தி வேகமாகச் சென்றாள். ஆகையால் தான் அவள் கௌதமை இடிக்க நேர்ந்தது.

சாரிங்க தெரியாம இடிச்சுட்டேன். மன்னிச்சிடுங்க என சொல்லிக்கொண்டு அங்கிருந்து நேர்காணல் அறையை நோக்கி நடந்தாள் சக்தி.

கௌதம் எரிச்சலடைந்திருந்தாலும், அவள் மன்னிப்பு கேட்டதால் சற்று மனம் இறங்கினான். அதுமட்டுமின்றி சற்று வியந்தும் நின்றான். காரணம், சக்தியின் பேரழகு அவனது 32பற்களின் பிரகாசத்தில் தெரிந்தது.

உடனே கௌதம், "அழகான பொண்ண பாத்தா! ஒடனே பல்ல காட்டுவியா ராசா! மொதல்ல அந்த ரோசாப்பூ சொந்தகாரிய கண்டுபிடிக்கணும்..." என தன்னிடமே சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். வெளியேவந்து சாலையில் நடந்து கொண்டிருக்க, அருகே ஒரு பெட்டிக்கடை ஒன்று வந்தபோது சிகரெட் ஒன்றை வாங்கிக்கொண்டு புகைவிட ஆரம்பித்தான். தன் தாயிடம் வேலைகிடைத்த நற்செய்தியைச் சொல்ல அலைபேசியை மீண்டும் எடுத்தான். "இங்கே எந்த தடங்கலும் வராது! நீ பேசுடா கௌதம்" என தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அவனது தாய்க்கு அழைத்தான்.

அவன் நீண்டநேரமாக அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசிக் கொண்டிருக்கையில், ஸ்கூட்டரில் அந்த அழகுதேவதை சக்தி இவனை கடந்துசென்றாள். இவன், அம்மா! என திகைப்பான குரலில் இழுத்தான்.

என்னடா தம்பி! கொரலு ஒருமாதிரி இழுக்குது...

ஒரு நிமிஷம் இரும்மா! திரும்ப கூப்டுறேன்...என இணைப்பை துண்டித்தான் கௌதம்.

கௌதம், அவளின் அழகை ரசித்துக்கொண்டிருப்பது கண்களின் நகர்வில் தெரிந்தது. சக்தியோ சிவப்புநிற உடையில், அவளை தன்வசப்படுத்தும் அளவிற்கு, கௌதமை ஈர்த்தாள்.அவள் தலையில் சிவப்புநிற ரோஜாவை கண்டதும் இவனது கால்கள் நடக்கவில்லை, பறக்கத் தொடங்கின. அப்படியே அவளது வண்டி எண்ணைக் கண்டதும் இவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வண்டி எண் TN07 RY1192 என இருந்தது.

கௌதம் இன்பக்கடலில் நீச்சலடிக்க தயாராகிவிட்டான். அவனது கைகள் பையிலிருந்த ரோஜாமலரை கண்டெடுத்தன. அவனோ தானாக பேச ஆரம்பித்தான்.

"ரோஜா மலரை தொலைத்த இவள்! ரோஜா மலரிடம் பேசவைத்த இவள்! கனவிலே புலம்பவைத்த இவள்! இடித்துவிட்டு இன்பத்தைத் தந்த இவள்! நான்தேடும் பெண்ணிலா இவள்! இனி என்னவள்! மலரை தொலைத்து, என்னை பறித்துக்கொண்டாள்..." என்றவாறே இன்ப கடலில் மூழ்கியே போனான்.

என்னடி வேல கெடச்சிடுச்சா?

பார்வதியின் கேள்விக்கு,
கெடச்சிருச்சும்மா. இந்தா லட்டு... என பார்வதியின் வாயில் இனிப்பை திணித்தாள் சக்தி.

இந்த சந்தோசத்த, அப்பாவுக்கு நல்ல சமையலோட சேத்து சொல்லனும் மா. வழக்கம்போல உன் ஆளுக்கு உப்புமா கெளரி வச்சிராத மா!... நாம இன்னைக்கு பிரியாணி சமைச்சு அசத்திருவோம்...

சிவநேசன் வரவை நோக்கி காத்திருந்தனர் சக்தியும் பார்வதியும், சிவநேசன் வேலை முடித்துவிட்டு வந்தார்.

என்னம்மா இன்டர்வியூ எப்படி இருந்துச்சு?

அப்பா எனக்கு வேல கெடச்சுடுச்சு. மாசம் 25000ரூபா சம்பளம். ஆஃபிஸ் ரிசப்ஸனிஸ்ட் வேலப்பா என தனது மகிழ்ச்சியை பகிர்ந்தாள், சக்தி. பின்பு மூவரும் உணவருந்திவிட்டு உறங்கச்சென்றார்கள்.

கௌதம் மல்லாந்து கிடந்து ரோஜாமலரை கையில் ஏந்தியபடி விட்டத்தை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். விட்டத்தில் சக்தியின் முகம் முழுவதும் நிறைந்திருந்ததுபோல் அவனுக்கு தோன்ற, அவனது 32 பற்களும் மின்னிட்டன. உறக்கத்தை நோக்கி, அவனது காதல்பயணம் கனவிலே தொடர்ந்தது.

மறுநாள், கௌதம் முகமலர்ச்சியோடு அலுவலக வாயிலில் நுழைந்ததும், காவலாளிக்கு வணக்கம் வைத்துவிட்டு சிரித்துக்கொண்டே சென்றான். அவன் நடைமேடையில் இருந்து வாகனங்கள் செல்லும்பாதையில் கீழிறங்க, திடீரென அவனை யாரோ திட்டுவது போல் தோன்றியது. ஆனாலும் அவன் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவன் கையை பிடித்து யாரோ இழுப்பது போல் தோன்றவே, கனவுலகத்திலிருந்து மீண்டுவந்து அவன் திரும்பி பார்க்க, அந்த பேரழகி சக்தி இவனை திட்டிக்கொண்டிருந்தாள். அதற்கு காரணம், இவன் பாதையின் குறுக்கே வந்ததால் அவள் சட்டென பிரேக் அடித்து நிலைதடுமாறி கீழேவிழுந்தாள். அவளது கைகளிலும், வாகனத்திலும் சிறு காயங்கள் உண்டாகியிருந்தன.

சார், யார நெனச்சுக்கிட்டு இப்படி பல்ல காட்டிட்டே போறீங்க...என சக்தி கேட்க,

"உங்கள நெனச்சு தான் போறேன்" என மனதில் சொல்லிக்கொண்டு, சாரிங்க நான் முதல்நாள் வேலைங்கிற சந்தோசத்துல வந்தேன். அதான் இப்படி ஆயிருச்சு. முதல்ல வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம். அப்புறம் என்ன திட்டுங்க எனக் கூறினான் கௌதம். ஒருபுறம் கோபம் இருந்தாலும் மறுபுறம் இவளது காயம் முதலுதவிக்கு நாடியது.

ஹாஸ்பிட்டல் போற அளவுக்கு ஒன்னும் பெரிய காயம் ஆகல. இங்கேயே ஃபஸ்டெய்டு பண்ணிக்கலாம்...என்று சொல்லி முதலுதவி அறைக்கு சென்றாள் சக்தி. அவளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பிறகு வெளியே அவள் வரும்பொழுது கௌதம் நின்று கொண்டிருந்தான்.

சாரிங்க என்னோட முதல் நாளே, உங்களுக்கு முதலுதவி பன்ற அளவுக்கு ஆயிடுச்சு. தப்பு என்னோடது, என்ன மன்னிச்சிடுங்க என கௌதம் மீண்டும் மன்னிப்பு கேட்க,

சரி விடுங்க. திரும்பவும் இப்படி பல்ல காட்டிட்டே போகாதீங்க... என முறைப்பது போல் நடித்துக்கொண்டே கிண்டலடித்தாள் சக்தி.

என் பேரு கௌதம், உங்க பேரு என்னங்க...

என் பேரு சக்தி. எனக்கும் இன்னைக்கு தான் முதல்நாள் வேல...

சக்தி என அவள் பெயரைக் கேட்டதும் "சக்தி...சக்தி..." என இரண்டு முறை, கிழக்கும் மேற்குமாய் தலையை ஆட்டிவிட்டு மனதில் அவள் பெயரை ஏற்றிக்கொண்டான்.

சக்தி, நீங்க கோவிச்சுக்கலேனா நாம ரெண்டு பேரும் காபி குடிக்க போலாமாங்க? வேலை தொடங்க இன்னும் ஒரு 15 நிமிஷம் இருக்கு. உங்களுக்கு ஓகேன்னா போலாம்.

சிறிது யோசித்துவிட்டு, சரி! வாங்க போலாம் என்றாள், சக்தி. "பாக்க நல்லவனா தான் இருக்கான்! இருந்தாலும் போக போக தெரியும்"என மனதில் நினைத்துக் கொண்டு அவனுடன் சென்றாள், சக்தி.

இருவரும் காஃபி குடிக்க தயாரானார்கள். எடுத்துக்கோங்க சக்தி...என்று கௌதம் சொல்ல, சரி என்று காஃபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள் சக்தி. கௌதம் அவளை முழுமையாக நோட்டமிட ஆரம்பித்தான். அவளது கூந்தல் அசைவது போலவே இவனது மனதும் அசைந்தது. அவள் காஃபி குடிக்கும் அழகை இரசித்துக்கொண்டிருந்த இவனை, ஓரக்கண்ணால் சக்தி கண்காணித்தாள்.

ஹலோ சார்! காஃபிய குடிங்க, என்னையே பாத்துட்டு இருக்கீங்க...

பொண்ணுங்க காபி குடிக்கிறதே தனி அழகுங்க. அதுலயும் நீங்க குடிக்கிறவிதம் பேரழகு. ஒரு பேரழகு, பேரழகா காஃபி குடிக்கிறத பக்கத்துல பாக்குற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காதுங்க...என்று ஒரு நங்கூரமிட்டான் கௌதம்.

ஹலோ போதும்! போதும்! ரொம்ப வருணிக்காதீங்க. காஃபிய குடிங்க...

நான் ஒன்னும் உங்களை மட்டும் பாக்கல. ஒரு கரப்பான் பூச்சி ரொம்ப நேரமா உங்க தலய சுத்தி சுத்தி வருது. அதுக்கும் கொஞ்சம் காஃபி குடுங்க...என்று இவன் சின்னதாய் ஒரு பொய் சொல்ல, சக்தி சட்டென பயத்தில் காஃபியை உதறித் தள்ளிநின்றாள். அந்த காஃபி கௌதமின் சட்டையில் கரையை உருவாக்கியது.

சாரி...சாரி...கௌதம். மன்னிச்சிடுங்க, தெரியாம பண்ணிட்டேன் என சக்தி கேட்க,

என்னங்க இப்படி பண்ணிட்டீங்க, அப்படின்னு நான் கேக்கமாட்டேன். இட்ஸ் ஓகே சக்தி, பரவாயில்லை விடுங்க. முதல்நாள் உங்களுக்கு காயம் ஆச்சு! எனக்கு கறை ஆச்சு! நமக்குள்ள என்னமோ ஆயிருச்சு...

ஹலோ என்ன சொன்னீங்க?

ஒன்னுமில்லைங்க, இப்படி ஆயிருச்சேன்னு சொன்னேன்...

உங்க பேச்சு சரியில்ல, முதல்ல உங்களுக்குத்தான் ட்ரீட்மென்ட் பண்ணனும்...

பண்ணிரலாம் சக்தி. "நீதான் என் மருந்தே" என மனதில் நினைத்துக்கொண்டான் கௌதம்.

சரிங்க ஆல் த வெரி பெஸ்ட்! நல்லா ஒர்க் பண்ணுங்க என்றான் கௌதம்.

தேங்க்யூ கௌதம்! நீங்களும் நல்லா ஒர்க் பண்ணுங்க. ஆல் த வெரி பெஸ்ட் எனக்கூறி நகர்ந்தாள், சக்தி.

கௌதமிற்கு நடந்ததெல்லாம் கனவா? நிஜமா? என்று புரியாமல் மீண்டும் கனவுலகத்தில் மிதக்க ஆரம்பித்தான். நாட்களும் கடந்தது. இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். அலுவலகத்திலும் நல்ல பணியாளர்களாக இருந்தனர்.

நாட்கள் செல்ல செல்ல சக்திக்கு கௌதமின் மேல் அன்பு அதிகரித்தது.

கௌதமிற்கு சக்தியின் மேல் காதல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சக்திக்கு, "கௌதம் கிட்ட என்னால பேசாம இருக்க முடியல. அவன் கூட இருக்கும்போதெல்லாம் சந்தோசமா இருக்கேன். ரொம்ப நல்லவனா இருக்கான். ரொம்ப கண்ணியமாக நடந்துக்குறான். நல்லா கவனிச்சுக்குறான். நலம்விரும்பியா இருக்கான். ஒருவேளை நான் அவன லவ் பண்றேனோ?..." என தன் மனதிடமே கேள்வி எழுப்பிக்கொண்டாள்.

அன்றொரு நாள், ஞாயிறு விடுமுறை தினத்தன்று, கௌதம் சக்தியிடம் தன் காதலை வெளிப்படுத்த எண்ணினான். அவளுக்கு அலைபேசியில் அழைத்து,

சக்தி நான் உன்னை உடனே பாக்கனும், நீ கெளம்பி வா! நம்ம ஆஃபீஸ் பக்கத்துல இருக்குற காஃபி ஷாப்புக்கு வந்துரு.

சரிடா நான் வரேன். என்னாச்சு? எதாவது முக்கியமான விஷயமா? என்னன்னு சொல்லுடா...

நீ கெளம்பி நேர்ல வா நான் சொல்றேன்...

சரி! இரு வர்றேன்...


பிறகு, கௌதம் ஒரு சிவப்பு ரோஜாமலர் ஒன்றையும், தனது காதல் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு சென்றான்.

சக்தியின் மனதில் "எதுக்காக வரச் சொல்லியிருப்பான்? அதுவும் ஒடனே வர சொல்றான்! என்னவாயிருக்கும்" என்று ஓடிக்கொண்டிருந்தது. சரி சென்றுபார்க்கலாம் என்று நினைத்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டாள்.

கௌதம் மனதில், எப்படி அவக்கிட்ட சொல்ல போறோம்? அவ எப்படி இத எடுத்துக்குவா? சரி எது நடந்தாலும் பாத்துக்கலாம் என்று தன்னிடம் சொல்லிக்கொண்டே காஃபி கடையை நோக்கிச் சென்றான்.

அதன்பிறகு, இருவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. சக்தி காஃபி ஷாப் அருகே வந்து கொண்டிருக்கையில், வேகமாக வந்த லாரியொன்று சக்தியினுடைய ஸ்கூட்டரின் பின்புறம் பலமாக இடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சக்தி, சாலையில் கீழே விழுந்தாள். அவளது வலதுபுற தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. அவளது வெள்ளை உடை சிவப்பாக மாறியது. உயிருக்காக போராடிக் கொண்டிருந்தாள் சக்தி. "கௌதம், சீக்கிரம் வாடா! என்னைய காப்பாத்து..." என்று வாயசையும் மெல்லியகுரலில் சொல்லி துடித்துக் கொண்டிருந்தாள்.

கௌதம் காஃபி ஷாப் அருகே வந்தான். அங்கு கூட்டம் அதிகம் இருப்பதைக் கண்டதும், என்னாச்சு? என்று ஒருவரிடம் கேட்க, அவர் "ஒரு பொண்ணு ஸ்கூட்டர்ல வந்துச்சு, அத லாரிக்காரன் ஒருத்தன் இடிச்சுட்டு போயிட்டான் பா. அதோ அந்த வண்டி தான்" என்று கரத்தை நீட்டினார்.

வண்டி எண் TN07 NY1192 என இருந்தது. அதைக் கண்டதும் கௌதமின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. கூட்டத்தை நோக்கி வேகமாக ஓடினான்.கூட்டத்தின் உள்ளே நுழைந்தான். அங்கே சக்தி,"கௌதம் சீக்கிரம் வாடா! என்னைய காப்பாத்த வாடா..." என்று வாயசைத்துக்கொண்டிருந்தாள்.

ஐயோ, சக்தி என்னாச்சுடி? கடவுளே! ஐயோ சக்தி...என்று கண்ணீர் ததும்ப அவளை தன் மடியில் கிடத்தினான்.

ஆம்புலன்சுக்கு சொல்லிருக்குப்பா என கூட்டத்தில் ஒருத்தர் சொல்ல, கௌதம் கட்டுப்பாட்டை இழந்தவனாய் கதற ஆரம்பித்தான்.

சக்தி என்னப்பாரு, உனக்கு ஒன்னும் ஆகாது. நானிருக்கேனென்று அவளது கண்களையே கண்டுகொண்டிருந்தான்.

எதுக்குடா என்ன வர சொன்ன? என வாயசைவில் கௌதமிடம் அவள் கேட்க, சற்றும் தாமதிக்காமல், "ஐ லவ் யூ சக்தி!" என்று பதிலளித்தான், கௌதம்.

அதைக் கேட்டதும் சக்தி மெல்ல சிரித்துக்கொண்டே அவனது கனவு காதலியாகவே மாறினாள். ஆம்,சக்தியின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது.

சக்தி 'ஐ லவ் யூ டி' என கதறி கண்ணீர்விட ஆரம்பித்தான் கௌதம். சக்தி என்னைய விட்டுட்டு போயிடாதடி! ப்ளீஸ் டி, உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன். என்னைய விட்டுட்டு போயிடாத...ப்ளீஸ்!... என்று கதறிக்கொண்டே இருந்தான்.

திடீரென்று அவன் முகத்தில் யாரோ தண்ணீர் தெளித்தார்கள். திடுக்கென்று விழித்தெழுந்த அவன்,

சக்தி!... நீ இன்னும் சாகலையா? உயிரோட தான் இருக்கியா? எனக் கேட்க,


எதிர்முனையில் கையில் பிளாஸ்டிக் பக்கெட்டுடன் சக்தி கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

அட அறிவு கெட்ட புருஷா! நீதான்டா தெனமும் கனவு! கனவுனு என்ன சாவடிக்கிற. நான் நெஜத்துல செத்திருந்தா கூட ஒரு தடவ தான்டா செத்துருப்பேன். ஆனா உன் கனவுல மட்டுந்தான் தெனமும் செத்துட்டு இருக்கேன். அங்க, உன் புள்ளைங்க ரெண்டும், "அம்மா! நீ மட்டும் எப்புடிம்மா தெனமும் செத்து செத்து உயிரோட வர்றேன்னு, கேக்குதுங்கடா" இனிமேல் என் சாவ பத்தி கனவுகண்ட, மவனே! உனக்கு சாவுதான்டா...

என்ன பண்றது பேபி மா "கனவெல்லாம் நீ தானே" என ஐஸ் வைத்தான்.


யப்பா... இவன் அலப்பறை தாங்க முடியலடா சாமி. போயி ஒருகிலோ சிக்கன் வாங்கிட்டு வா. சிக்கன் பிரியாணி செய்யணும். கொழந்தைங்க ஆசப்பட்டு கேக்குறாங்க, கனவு காணாம போயி சீக்கிரம் வாங்கிட்டு வாடா என் செல்ல புருஷா...

ஐ லவ் யூ டி பொண்டாட்டி... என்று சொல்லிவிட்டு, சக்தியின் ஸ்கூட்டரில் கறிவாங்க புறப்பட்டான் கௌதம்.


முற்றும்.

ஆ.கிருஷ்ணதாஸ்

PC: pexels-porapak-apichodilok-348520

#சிறுகதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக