ஐயா அன்பு! இந்தாயா இதுல ரெண்டு லட்சம் இருக்கு. இத வச்சுக்கிட்டு நீ நெனைச்ச மாதிரி ஒரு சாப்பாடு கடை போட்டு, பொழச்சு! பெரிய ஆளா முன்னுக்கு வரனும்யா...
ஏதுமா இம்புட்டு பணம்? எனக்கு வேணாம்! இத அப்பாவோட மருந்து செலவுக்கு வச்சுக்கோங்க.
அதெல்லாம் சரிதான் அன்பு! இந்த பணம் உங்க அப்பா கொஞ்சம் கொஞ்சமா உனக்காக சேத்து வச்சது வாங்கிக்கோய்யா...
இல்லமா நா பேங்குல தொழில் தொடங்க கடன் கேட்டுருக்கேன். கூடிய சீக்கிரத்துல கெடச்சிரும், இந்த பணத்த நீங்களே வச்சிக்கோங்க!
இல்ல அன்பு! நீயும் பணத்துக்காக ரொம்ப நாளா போராடிட்டு இருக்க, இன்னும் கெடச்சபாடில்ல. அதனால, இத நீ வச்சுக்கோ! இந்த பணத்தை வச்சு கடைய ஆரம்பிக்க ஏதாச்சும் வழி இருக்கான்னு பாருயா!
(தன் தாயின் சொல்லுக்கு மறுமொழி சொல்லமுடியாமல் பணத்தை பெற்றுக்கொண்டான்.)
சரிங்கம்மா! இந்த பணத்த நான் வாங்கிக்கிறேன்.
ரொம்ப சந்தோசம் யா.
வங்கிக் கடனை நினைத்துக் கொண்டு, காலம் கடத்த வேண்டாம் என எண்ணி அன்பு இரண்டு தினங்களில் மதுரை மாநகர் செல்ல திட்டமிட்டான். அங்கே உள்ள தனது நண்பன் அப்துல்லாவிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடை போடுவது குறித்தும் தான் தங்குவதற்கான ஏற்பாடு குறித்தும் உதவி கேட்டுக் கொண்டான். பிறகு அப்துல்லாவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அன்புடன் தகவல் தெரிவித்தான்.
தனது பெற்றோரிடம் இத் தகவலை பகிர்ந்து விட்டு மதுரை செல்ல ஆயத்தமானான் அன்பு. மறுநாள் காலை தன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை பூஞ்சோலைக்குடி கிராமத்திலிருந்து மதுரை மாநகர் நோக்கி தொடங்கினான். பலவித கனவுகளோடு அன்புவின் அந்த இனிமையான பயணம் மதுரை மாநகரை வந்தடைந்தது.
அப்துல்லாவை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் இருக்கும் இடத்தை சொன்னான் அன்பு. சிறிது நேரத்தில் அப்துல்லாவும் பேருந்து நிலயத்தை தனது ஆட்டோ மூலம் வந்தடைந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரின் சந்திப்பும் கட்டித் தழுவிக்கொண்டது. பின் இருவரும் அப்துல்லா இல்லத்திற்கு சென்றனர்.
யோவ் மாப்ள, உள்ள வாயா! இதுதான் நம்ம வசந்த மாளிகை...
புன்னகையுடன் உள்ளே நுழைந்தான்.
மாப்ள, உன் பைய இங்க குடு! இந்தா துண்டு...பல்பொடி... பல்ல வெளக்கி...குளிச்சிட்டு ரெடியாகி வா...
சரி அப்துல்லா...
அப்துல்லாவின் அரவணைப்பும் இல்லதோரின் உபசரிப்பும் அன்புவிற்கு மதுரையில் முதல் பாச மழையைப் பொழிந்தது. பாச மழையோடு தண்ணீரில் நனைந்தான் அன்பு. குளித்துவிட்டு பின் உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
இந்தா மாப்ள, சுடச்சுட இட்லி... நம்ம ஊரு ஸ்பெஷலு! வருங்கால ஹோட்டல் முதலாளிக்கு எங்களோட வரவேற்பு...
என்ன அப்துல்லா, இவ்ளோவா...?
நல்லா சாப்டு மாப்ள, உன்னைய பாத்து எவ்வளவு நாளாச்சு? இப்போ தான் வீட்டுக்கு வந்துருக்க...
நீயும் சாப்டு மாப்ள...
இல்ல மாப்ள, நீ சாப்டு! உன்ன பாத்ததே மனசுக்கு நெறஞ்ச மாதிரி இருக்கு! நான் அப்புறம் சாப்டுக்குறேன்...
அவர சாப்பிட விடுங்க! என அப்துல்லாவின் மனைவி சொல்ல,
சரிடா மாப்ள, நீ மொதல்ல சாப்டு! மீதிய அப்புறம் பேசிக்கலாம். இல்லைன்னா உன் தங்கச்சி கோவிச்சுக்குவா...
புன்னகைத்துக் கொண்டே சாப்பிட்டான் அன்பு.
(பின், அன்பு அப்துல்லாவுடன் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கடையை காண ஆட்டோவில் சென்றான்.)
மாப்ள, இது தான் கடை! பஸ் ஸ்டாண்டுல் இருந்து 200 மீட்டர் தள்ளி இருக்கு. ஆனா, இங்க கடைய போட்டா நல்லா ஓடும்.
கடை நல்லா இருக்கு. அட்வான்ஸ் எவ்ளோ சொல்றாங்க மாப்ள?
அட்வான்ஸ் 1.5லட்சம் சொல்றாங்க மாப்ள, ஓனர் நமக்கு நல்லா தெரிஞ்சவர் தான். இதைவிட கம்மியா வேற எங்கேயும் கெடைக்காது மாப்ள...
சரி மாப்ள, ஆனா எங்கிட்ட இருக்கிற இரண்டு லட்சத்துல அட்வான்ஸ் குடுத்துட்டா! மீதி இருக்கிற பணத்துல எல்லா பொருளும் வாங்க முடியாது. ரெண்டு நாள் கழிச்சு பேங்க் லோன் விசயமா ஊருக்கு போறேன. அப்போ எனக்கு கடன் தருவாங்க. அதனால ஒரு நாலு நாள் எனக்காக டைம் கேட்டு சொல்ல முடியுமா?
சரி மாப்ள நான் பேசிக்கிறேன். அப்புறம் உனக்கு ரூம் ரெடியா இருக்கு மாப்ள. வாடகை 3,000ரூபாய் சொல்றாங்க! அட்வான்ஸ் 10000ரூபாய். இதைவிட கம்மியா கெடைக்கல மாப்ள.
சரி மாப்ள, பாத்துக்கலாம்...
இப்பவே, அதையும் போய்ப் பாத்துரலாம் மாப்ள...
சரி மாப்ள, போவோம்...
ஆட்டோவை எடுத்துக்கொண்டு இருவரும் அன்புவிற்கு பார்த்து வைக்கப்பட்டிருந்த தங்குமிடத்தை அடைந்தனர். வீட்டுச் சொந்தக்காரரிடம் சாவியை பெற்றுகொண்டு அறையை காணச் சென்றனர். அன்பிற்கு அந்த அறை மிகவும் பிடித்துவிட்டது. அட்வான்ஸ் தொகையை வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, சாவியை பெற்றுகொண்டு பின் இருவரும் அப்துல்லா இல்லத்திற்கு சென்றனர்.
ரொம்ப நன்றி மாப்ள! உன்னோட இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்.
யோவ் மாப்ள, என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க? ஃப்ரீயா வுடுய்யா...
இல்ல மாப்ள, நீ இல்லேன்னா இதெல்லாம் சாத்தியமே இல்ல.
சரி மாப்ள, நீ போய் நிம்மதியா தூங்கு யா! எல்லாமே நல்லதாவே நடக்கும்...
சரி மாப்ள... என சொல்லிவிட்டு உறங்கச் சென்றான் அன்பு. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அப்துல்லாவின் மாப்ள என்ற வார்த்தை அன்புவிற்கு பெரும் மருந்தாக இருந்தது, நிம்மதியாக உறங்கினான்.
மறுநாள் கடைக்கு தேவையான பொருள்களை வாங்க அப்துல்லாவுடன் சென்றான். அடுப்பு, கல் மற்றும் உணவு சமைக்க தேவையான பாத்திரங்கள் என 65000 ரூபாய் செலவில் பொருட்களை வாங்கினார்கள். அனைத்தையும் ஆட்டோ மூலம் அன்புவின் அறைகக்கு கொண்டு சேர்த்தனர். பின் தனது உடமைகளை அறையிலேயே வைத்து விட்டு இரண்டு நாள் கழித்து ஊருக்குச் சென்றான் அன்பு. அங்கே வங்கிக் கடனை பெறுவதற்காக ஆவலோடு சென்ற அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இம்முறையும் வங்கிக் கடன் கிடைக்கவில்லை. கடன் கிடைப்பதற்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலாகும் என வங்கி மேலாளர் சொல்லவே ஏமாற்றத்துடன் திரும்பினான் அன்பு.
தனது பெற்றோரிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டாம் என எண்ணிய அன்பு, இன்னும் ஒரு வாரத்தில் பணம் கிடைத்துவிடும் என அவர்களிடம் பொய் சொல்லி விட்டு மறுநாள் மதுரைக்கு கிளம்பினான்.
அப்துல்லாவை சந்தித்தபோது,
யோவ் மாப்ள, என்னாச்சு? எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுல...
இல்ல மாப்ள, லோன் கெடைக்க இன்னும் மூணு மாசத்துக்கு மேல ஆகும்னு சொல்லிட்டாங்க...
என்னயா மாப்ள சொல்ற?...
ஆமா மாப்ள, அதான் ஒரே கொழப்பமா இருக்கு. வீட்ல வேற ஒரு வாரத்துல பணம் கெடச்சிரும்னு பொய் சொல்லிட்டேன்...
ஏன் மாப்ள பொய் சொன்ன?...
ஒவ்வொரு தடவையும் வீட்ல கெடைக்கலைனு சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு மாப்ள. அவங்க ஒருபக்கம் எனக்கு ஆறுதல் சொன்னாலும் இன்னொரு பக்கம் என்னைய நெனைச்சு வருத்தப்படுவாங்க. அதான், அவங்கள கஷ்டப்படுத்த மனசு வரல மாப்ள...
விடுயா மாப்ள, நல்ல விஷயத்துக்கு இந்த மாதிரி தடங்கள் எல்லாம் வரத்தான் செய்யும்...
அதுகூட பரவாயில்ல மாப்ள, அம்மா குடுத்த காசுல ஏற்கனவே போக்குவரத்து செலவு, பொருள், ரூம்னு 80,000 ரூபாய் செலவாயிருச்சு. மீதி இருக்குற 1,20,000ரூபாய வச்சு கடைக்கு அட்வான்ஸ் கூட குடுக்க முடியாது. அப்டியே குடுத்து சமாளிச்சாலும், மளிகை சாமான், கடை வேலைக்கு ஆளு வைக்கனும். இதெல்லாம் எப்படி சமாளிக்கிறதுனு தெரியல... இன்னொரு பக்கம் அப்பாவுக்கு ஒடம்பு சரியில்ல. ஆபரேஷன் பண்ண பத்து லட்சம் வேணும். இந்த லோன் வாங்கி கடையை போட்டு எப்படியாச்சும் முன்னுக்கு வந்து எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு நெனச்சேன். இப்போ எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல மாப்ள...
யோவ் மாப்ள, இப்போ என்ன நடந்துச்சுன்னு கண்கலங்குற நீ!...
என்னால முடியல மாப்ள...
சரி மாப்ள, நீ வருத்தப்பட மாட்டேன்னா உங்கிட்ட ஒரு யோசனை சொல்லட்டுமா?
சொல்லு மாப்ள! வருத்தப்பட இனி என்ன இருக்கு?...
இந்தக் கடைய நெனைச்சு வருத்தப்படாத மாப்ள. இப்ப இல்லைன்னாலும் என்னைக்காவது ஒருநாள் நீ ஹோட்டல் மொதலாளி தான்! இப்போதைக்கு சின்னதா ஒரு தள்ளுவண்டி வச்சு கடை போட்டு ஆரம்பிக்கலாமே மாப்ள...
(அப்துல்லாவின் வார்த்தைகள் அன்புவை சமாதானப்படுத்தத் தொடங்கியது)
என்ன மாப்ள, சொல்ற...?
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வயசானதுனால தள்ளுவண்டி கடை போடுறத நிறுத்திட்டாரு! அவர்கிட்ட இருக்குற தள்ளுவண்டிய வேணும்னா கேட்டு பாக்கலாமா மாப்ள...?
சரி மாப்ள, ஆனது ஆகட்டும்...
(அந்தப் பெரியவரிடம் இருந்து தள்ளு வண்டியை 18000ரூபாய்க்கு பெற்றுக்கொண்டனர். பின் பழுதுபார்த்தல், வண்ணப்பூச்சு என 2000ரூபாய் செலவானது.)
மாப்ள இந்த வண்டிய வச்சு இப்போதைக்கு கடைய போடு! நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவ...
ரொம்ப நன்றி மாப்ள. ஆனா, வீட்டுல கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியல...
நீ ஒன்னும் கவலைப்படாத! கையில மீதி இருக்கிற பணத்துல, கடைக்கு தேவையான காய்கறி அப்புறம் உன்னோட செலவுக்கு தேவையான பணத்தயும் எடுத்து வச்சுக்கோ. அது போக மீதி இருக்கிற பணத்த கொஞ்சம் கொஞ்சமா உன் வீட்டுக்கு அனுப்பு. இப்போதைக்கு இப்படி சமாளிப்போம்! அப்புறம் நடக்குறத பாத்துக்கலாம்...
(அக்கணம் பதிலேதும் கூறாமல் அப்துல்லாவை அணைத்துக்கொண்டு கண்ணீர் மல்க நன்றி கூறினான்.)
யோவ் மாப்ள, என்னய்யா சின்னபுள்ள மாதிரி அழுதுட்டு இருக்க...!
இல்ல அப்துல்லா, உன்னோட இந்த உதவிக்கு நான் என்னைக்குமே நன்றிக்கடன் பட்டுருக்கேன்...
(அப்துல்லாவும் சிறிது கண் கலங்கினான்.)
மறுநாள் காலை, சிவகாமி டிபன் ஸ்டால் என்று தனது அம்மாவின் பெயரில் கடையை ஆரம்பித்தான் அன்பு. அப்துல்லாவும் வழக்கம்போல் தனது ஆட்டோ ஓட்டும் பணியைத் தொடர்ந்தான்.
புதிய இடம் என்றாலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை எப்படி கவனிப்பது என்கிற வித்தையை தெரிந்து வைத்திருந்தான் அன்பு. தனது அன்பு மொழியால் அனைவரிடமும் உணவை மட்டுமில்லாமல் முகமலர்ச்சியையும் பரிமாறினான். பெரிய லாபம் என்று சொல்லமுடியாமல் போனாலும், வரவு செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அவனது வியாபாரம் சிறிது சிறிதாக தொடர்ந்தது.
அன்றொரு நாள் இரவு வியாபாரம் நடந்து கொண்டிருக்கையில்,
ஐயா, ரொம்ப பசிக்குதுயா! சாப்பிட கொஞ்சம் குடுங்கய்யா என்று பிச்சையெடுத்த வண்ணம் ஒரு முதியவர் வந்துகொண்டிருந்தார். கடையில் உணவருந்தி கொண்டிருந்தவர்கள் அவரை விரட்டினார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்பு எதுவும் பேசாமல் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த முதியவர் பசியோடு சில அடிகளை எடுத்து வைத்தார். சிறிது தூரத்தில் நின்று தள்ளு வண்டியையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏனோ, அன்புவின் கண்கள் கண்ணீரை தெளித்தது. முதியவர் மிகுந்த பசியோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தவன், சிறிது நேரத்தில் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் சென்றவுடன், ஒரு தட்டில் ஆறு இட்லி, சாம்பார் மற்றும் சட்னி என ஊற்றிக்கொண்டு அந்த முதியவரை நோக்கி நகர்ந்தான்.
ஐயா...!
சொல்லுங்க சாமி...
இந்தாங்கய்யா, இதுல இட்லி இருக்கு! சாப்டுங்க...
ரொம்ப நன்றி சாமி...
(அந்த கணத்தில் முதியவரின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.)
நல்லா சாப்டுங்கய்யா! நான் போயி உங்களுக்கு தண்ணி எடுத்துட்டு வரேன்...
கடவுளை வணங்கிவிட்டு சாப்பிடத் தொடங்கினார் அந்த முதியவர். அன்புவின் பாசமும் அவன் தந்த உணவும் முதியவருக்கு அந்த கணத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பேரானந்தத்தை தந்தது போல் இருந்தது.
ரொம்ப நன்றி சாமி! நீங்க நல்லா இருக்கணும்...
பரவாயில்லைங்க ஐயா...
சாமி, உங்கள நான் இந்த எடத்துல இப்பதான் பாக்குறேன்...!
ஆமாங்கய்யா, நான் கடை போட்டு கொஞ்ச நாள்தான் ஆகுது...
நல்லதுங்க சாமி, உங்க பேரு?
என் பேரு அன்பு. உங்க பேருங்கய்யா?
என் பேரு மருதாண்டவன். நான் ஒரு அனாதை, உங்க உதவிக்கு ரொம்ப நன்றி! நான் கெளம்பட்டுமா சாமி. உங்க வியாபாரத்த தொந்தரவு பண்ண விரும்பல...
அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்கய்யா! இன்னைக்கு வியாபாரம் அவ்வளவு தான். ஆமா, நீங்க எங்க தங்கி இருக்கீங்க ஐயா...?
அதோ அங்க தெரியுது பாருங்க ஒரு பாலம்! அந்த பாலத்துக்கு அடியில தான் தங்கியிருக்கேன்...
சரிங்கய்யா, இனிமேல் நீங்க என் கடையிலேயே சாப்பிடுங்க...!
ஐயோ சாமி, நான் உங்க கடைக்கு சாப்பிட வந்தா, சாப்பிட வரவங்க கூட வரமாட்டாங்க...
என்னங்கய்யா இப்டி சொல்றீங்க...?
இல்ல சாமி, கடைக்கு போய் காசு குடுத்து சாப்பாடு கேட்டாலும் தர மாட்டாங்க. அருவருப்பா தான் பாக்குறாங்க. சாப்பிட வரவங்களும் வெரட்டுவாங்க. யாரோ ஒருத்தர் தான் கொஞ்சமா சாப்பிட குடுப்பாங்க. அதனால நானும் உங்க கடைக்கு சாப்பிட வந்தா, உங்க வியாபாரத்துக்கு தான் பிரச்சனை.
அப்படின்னா ஒன்னு பண்ணுங்க! தெனமும் இந்த எடத்துக்கே வாங்க, நான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரேன்.
உங்களுக்கு எதுக்கு சாமி, வீண் சிரமம்...
சிரமமெல்லாம் இல்ல ஐயா! நீங்க வந்தா போதும்...
அன்புவிடமிருந்து விடைபெற்று பாலத்தை நோக்கி நகர்ந்தார் அந்த முதியவர். அன்பும் மகிழ்ச்சியோடு கடையின் பொருட்களை எடுத்துவைக்க எட்டு வைத்தான்.
காலை பொழுது விடிந்தது,
அன்பு உணவு தயாரித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் முதியவருக்காக எடுத்துச் சென்றான், முதியவரும் பெற்றுக்கொண்டார்.
சாமி, இந்தாங்க பணம்! என சில்லறைகளை வழங்கினார் அந்த முதியவர்...
ஐயா, இதெல்லாம் வேணாம்...
பரவாயில்ல சாமி! தொழில் வேற...தர்மம் வேற, நீங்க தெனமும் தர்மம் பண்ணாலும் எனக்கு அத ஏத்துக்க முடியாது. உங்களுக்கு சிரமம் குடுக்குற மாதிரி இருக்கும். அதனால இத வாங்கிக்கோங்க சாமி...
சரிங்கய்யா நான் வாங்கிக்கிறேன்! ஆனா, இனிமேல் என்னோட ஒவ்வொரு நாள் மொதல் போனி உங்ககிட்ட இருந்து தான்! அதேசமயம், இனிமேல் என்னைய அன்புனே பேர் சொல்லி கூப்புடுங்க...
ரொம்ப சந்தோஷம் சாமி!
பாத்தீங்களா, மறுபடியும் சாமினே சொல்றீங்க...
சரி, ரொம்ப சந்தோஷம் அன்பு...
அந்த நொடி முதல் இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் பழகினார்கள். அன்புவின் முதல் போனி மருதாண்டவரிடமே நிகழ்ந்தது. மேலும் இருவரும் ஒருவரையொருவர் பேசிப் பழகி நன்றாக தெரிந்து கொண்டனர். அன்பும் தனது ஹோட்டல் கனவையும் அவரிடம் எடுத்துக் கூறினான். இப்படியே தொடர்ந்தது அவர்களின் பயணம்.
சில நாட்கள் சென்றது,
ஐயா நான் பேங்க்ல கடன் வாங்குற விஷயமா ஊருக்கு போறேன்! இந்த ரெண்டு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. என்னோட நண்பன் அப்துல்லா கிட்ட உங்களுக்கு சாப்பாடு குடுக்க சொல்லி இருக்கேன், அவன் கொண்டுவந்து தருவான். நீங்க இந்த இடத்திலேயே தெனமும் வர நேரத்துக்கு வந்து வாங்கிக்கோங்க.
சரி அன்பு, பத்திரமா போயிட்டு வா! எல்லாம் நல்லபடியா நடக்கும்...
சரிங்கய்யா நான் போயிட்டு வரேன்...
அன்புவை பிரிந்திருக்கும் இந்த இரண்டு நாட்கள், நிச்சயம் தனக்கு கவலையாகவே இருக்கும் என உணர்ந்தார் மருதாண்டவன்...
ஊருக்குச் சென்ற அன்புவிற்கு மீண்டும் அதே அதிருப்திகரமான தகவல் தான்! பெற்றோரிடம் அதைப்பற்றி ஏதும் சொல்லாமல் சிறிது பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு சிரித்த முகத்துடனேயே விடைபெற்றான்.
மதுரை மாநகரை வந்தடைந்ததும் தனது அறைக்குச் சென்றான். அப்துல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டான். பிறகு அப்துல்லா அன்புவை தனது இல்லத்திற்கு வரச்சொன்னான்.
என்ன மாப்ள, வீட்டுக்கு வரச் சொல்லியிருந்த?...
வா மாப்ள, நீ சாப்பாடு குடுக்க சொன்னேல ஒரு பெரியவருக்கு! அவர் தான் உங்கிட்ட இந்த லெட்டரையும் அந்த தகரப் பெட்டியையும் பாதுகாப்பா வச்சிருக்கச் சொன்னாரு...
அவரு எங்க போனாரு? வேற ஏதாச்சும் சொன்னாரா?...
ஏதோ ஊருக்கு போறதா சொன்னாரு மாப்ள. வேற ஒன்னும் சொல்லல...
அவருக்கு யாருமே இல்லைன்னு சொன்னாரு, எந்த ஊருக்கு போவாரு? அந்த லெட்டர குடு மாப்ள...
"அன்புள்ள அன்புவிற்கு! எனக்கு யாருமே இல்ல, அனாதையா தான் நான் சாகப் போறேனு நெனச்சேன். ஆனா உன்ன என் வாழ்க்கையில வர வச்சு, ஆண்டவன் அந்த கவலைய தீத்துட்டான். அன்பு காட்ட கூட நேரமில்லாம ஓடிட்டு இருக்குற இந்த உலகத்துல, இந்த பிச்சைக்காரனுக்கும் உன் இதயத்துல ஒரு எடம் குடுத்து, அன்பையும் குடுத்த! நீ என்னைய விட்டு தற்காலிகமாக தான் பிரிஞ்சு போன. ஆனா, நான் உன்னை விட்டு நிரந்தரமா பிரிய வேண்டிய நேரத்துக்கு வந்துட்டேன். உன்கிட்ட ஒரு உண்மைய மறச்சிட்டேன். எனக்கு அடிக்கடி வயிறு வலி எடுக்கும், என்னன்னு பெரிய ஆஸ்பத்திரியில போய் பார்த்தேன். அது பயங்கரமான வியாதின்னு டாக்டர் சொன்னாரு, அது பேருகூட எனக்கு தெரியல. அதனால நீ என்னையப் பத்தி கவலைப்படாத, இந்த வாழ்க்கையே பிச்சைதான்! நான் கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சத இந்த தகரப் பெட்டியில வச்சிருக்கேன். இதை நீ மறுக்காம ஏத்துக்கணும், இதுதான் என்னோட அன்புப் பரிசு! நீ நல்லா இருக்கணும் அன்பு. அப்துல்லாவுக்கும் என்னோட நன்றிய சொல்லிரு.
அன்புடன் மருதாண்டவன்..."
லெட்டரை படித்து முடித்தவுடன், அன்பு கண்கலங்கிய படியே...
மாப்ள, ஆட்டோவ எடு மாப்ள! அவர போய் தேடுவோம்...
சரி மாப்ள, வாயா ஒடனே கெளம்புவோம்...
இருவரும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு பெரியவர் வசித்திருந்த பாலத்திற்கு சென்றனர். அங்கே சென்றதும் முதியவரை தேடினார்கள், அங்கே ஒரு தூணின் அடியில் துடித்துக் கொண்டிருந்தார் மருதாண்டவன்.
ஐயா, என்னாச்சு! வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்...
இல்ல அன்பு, "உன்ன கடைசியா ஒரு தடவை பாத்துறனுங்குற நப்பாசையில தான்! என் உயிர புடிச்சு வச்சிருக்கேன்."
அப்படியெல்லாம் சொல்லாதீங்கய்யா! எங்க கூட வாங்க, உங்கள கெஞ்சி கேக்குறேன்...
இல்ல அன்பு, என் கதை முடிய போற நேரம் வந்துருச்சு. அந்த தகரப் பெட்டியில கொஞ்சம் பணம் இருக்கு. அது உன்னோட ஹோட்டல் செலவுக்கு வச்சுக்கோ! யாராச்சும் சாப்பாடு பசியில பிச்சை கேட்டு வந்தா! அவங்களுக்கு உதவி பண்ணு அன்பு. இதுதான், "என்னோட கடைசி ஆசை! நீ நல்லா இருக்கனும் அன்பு. நீ நல்லா இருக்கனும்" என்றே கண்களை மூடினார், மருதாண்டவன்.
ஐயா! ஐயா! என கதறி அழுதான் அன்பு. அன்புவின் அழுகை நீண்டது....
(நீண்டநேர சோகத்திற்கு பின், அப்துல்லா அன்புவை ஆறுதல் படுத்தினான். இருவரும் பெரியவரை நல்லடக்கம் செய்தனர்.)
இரண்டு தினங்களுக்குப் பின்,
சோகத்தில் மூழ்கியிருந்த அன்பு, முதியவர் தந்த தகரப் பெட்டியை திறந்து பார்த்தான். அதில் இரண்டு சட்டையும், ஒரு அழுக்கு வேட்டியும் இருந்தது. அதற்கு கீழே சில்லறைகள் சிதறியும், ஒரு டப்பாவில் கசங்கிய நிலையில் ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அனைத்தையும் பொறுமையாக எண்ணினான். 10ரூபாய், 20ரூபாய், 50ரூபாய் மற்றும் சில்லறைகள் என மொத்தமாக 2 லட்சத்து 17 ஆயிரத்து 318 ரூபாய் இருந்தது. அன்பிற்கு ஆச்சரியமும் அழுகையும் தாங்க முடியவில்லை. அப்துல்லாவை தொடர்புகொண்டு இதனை கூறினான்.
ஒருவாரம் கடந்து சென்றது. "மருதாண்டவனின் அன்பு ஹோட்டல்" என்ற பெயரில் தனது கனவுக் கடையை தொடங்கினான் அன்பு. சிறப்பு விருந்தினர்களாக அவனது பெற்றோர்கள் பங்கேற்றனர். அன்புவின் கனவு நிறைவேறி நல்லபடியாக வியாபாரம் நடந்தது. ஆதரவற்றோருக்கும் அன்பு சாப்பாடு வழங்கி உதவினான். சில மாதங்களுக்குப் பின் அன்புவின் அப்பாவிற்கும் சிகிச்சை நடைபெற்று நலம் திரும்பினார்.
வழக்கம்போல், தனது முதல் போனியை கடையின் சுற்றுச்சுவரின் மேல் வைத்து மருதாண்டவருக்கு படைத்தான் அன்பு.
நன்றி
எண்ணமும் எழுத்தும்
ஆ.கிருஷ்ணதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக