மணிமாலை
திருவண்ணாமலை பேருந்துநிலையத்தின் ஜனத்திரள்களுக்கிடையே வரிசையாக நின்றிருந்த தூண்களை எண்ணிக்கொண்டே நகர்ந்தாள் ஜோதி. ஒரு கையில் ஊசியும், நாப்தலின் உருண்டை பாக்கெட்டுகளும் தொங்கிக் கொண்டிருக்க, மறுகையில் மணிமாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஜோதிக்கு அது பள்ளி விடுமுறைக் காலம்.
மக்கள் கூட்டத்தினிடையே "ஊசி..பாசி..பாச்சா உருண்ட.. வாங்கலயோ சாமி.."யென சப்தமாக கூவத் தொடங்கினாள். அதுசமயம் நாப்தலின் உருண்டை பாக்கெட்டுகளை தன் தோள்பட்டையின்மீது துண்டைப்போல் அணிந்துகொண்டாள். கருப்பு,சிவப்பு வெள்ளை,பச்சை,நீலமென வண்ண வண்ண மணிமாலைகள் அவளது இடக்கையின் மூட்டிலிருந்து வரிசையாக அடுக்கியிருந்தன. அவ்வப்பொழுது அவற்றை மேலே உயர்த்தி காட்டிக்கொண்டிருந்தாள்.
வியாபாரத்தினால் துருதுருவென நகர்ந்துகொண்டிருந்தவள், திடீரென ஒரு விளம்பரப் பலகையை பார்த்ததும் அண்ணாந்து நின்றாள். அதுசமயம் அவளைப்போலே பன்னிரெண்டு வயதையொத்த சகதோழியான ஆனந்தியும் அவளருகில் வந்துநின்றாள்.
இன்னா ஜோதி இங்க என்னடி நின்னுக்கினுருக்க?..
ஏ ஆனந்தி அந்த நெகைக்கட போடான்டா கவுனிச்சியா..
அந்தாண்ட என்னத்தடி பாக்க சொல்ற..
அந்த நடிக கழுத்துலக்கீற செயின பாரேன். ஜோராக்கீதுல..
ஏ! ஆமாடி ஜோதி நல்லாக்கீது. ஆமா அதுக்கென்னாயிப்போ?..
இல்லடி எனக்கும் இந்தமாரி ஒரு செயின கழுத்துல மாட்டிக்கினும்னு ஆசையாக்கீதுடி..
அதுக்கு எம்மாங்..காசாகுமுன்னு தெரியுமாடி..
அதெல்லாம் தெரியாது. ஒருநாள் நைனாகிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்னும்..
ஜோதி அதுக்கெல்லாம் நெறைய வேணும்டி. நமக்கிந்த ஊசி,பாசிய விக்கவே பேஜாராக்கீது. உன் நைனால்லாம் பாவம்டி..
ஆமாடி பாவந்தான்.இருந்தாலும் ஆசையாக்கீதே..
சரி அதவுடு! உங்கம்மா உன்னை வர சொல்லுச்சு. ரொம்பநேரமா ஒன்னைய தேடிக்கிட்டிருக்கு..
எதுக்கு வர சொல்லுச்சு?..
எனக்கின்னா தெரியும். நீ போய் கேளு..
ஆனந்தி பதிலளித்த மறுநொடியில், ஒரு ஆட்டுக்குட்டி துள்ளிக் குதித்தோடுவதை போல, ஜோதி அங்கிருந்து அவளது தாய் இராசாத்தியை நோக்கி ஓடினாள். பேருந்துநிலையத்தின் ஓர் ஓரத்தில், சீப்பு, கண்ணாடி, கண்மை, சோப்பு பெட்டிகள், மணிமாலைகள், நாப்தலின் உருண்டை பாக்கெட்டுகள், இன்னும் பிற விற்பனை சாதனங்களென துணிவிரிப்பில் கிடத்தியிருக்க, நடுவில் குத்தவைத்து அமர்ந்திருந்தாள் இராசாத்தி.
யம்மோவ் கூப்டியாம்மா, ஆனந்தி சொல்லுச்சு..
ஆமாடியம்மா கூப்ட கூப்ட காதுகேக்காம ஓடிட்டுக்கீற நீ..
எனக்குதான் கேக்கிலியே..
சரி! எத்தினி மால வித்துச்சுடி சாமி?..
ரெண்டு மாலதாம்மா வித்துச்சு. கத்தி கத்தி தொண்டதான் வலிக்கிது.ரொம்ப பசிக்கிதும்மா..
இந்தா சாமி கொஞ்சம் தண்ணிய குடிச்சிக்கிறியா..
அது சரிம்மா, ஏதோ சொல்ல வந்தியே இன்னா விசயம்..
அக்கணம் தன் தாய்கொடுத்த, மஞ்சள் பூத்திருந்த நீர்க்குடுவையை வாங்கி மொடக்..மொடக்கென்று ஒவ்வொரு மிடறுகளையும் பருகினாள் ஜோதி.
அதுவா, உங்கண்ணனுக்கு இன்னிக்கி பன்னண்டாப்பு பரிச்சை ரிசல்ட்டு வருதுல்ல, அவன் ஸ்கூலுக்கு போயிட்டு வந்ததும், இன்னைக்கு சாயந்தரமா நாம பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவாண்ட போலாம். இன்னா புரிதா..
இன்னாம்மா சொல்ற. அப்ப சாமிய வேண்ட போறமா?..
இல்லடியம்மா. வியாபாரத்துக்குத்தான் போறோம்..
யம்மோவ், அப்போ கோயிலாண்ட போனதும், அப்டியே சாமியையும் கிட்டபோயி பாத்துட்டு வரலாம்மா..
நாமெல்லாம் உள்ள போகமுடியாது சாமி. போகவும் கூடாது. பிரச்சினி ஆயிடும்..
ஏம்மா இப்டி சொல்ற, அன்னைக்கி நான் கோயில் பலகையில பாக்கும்போது, அனைவரும் வாரீர்..னுதாம்மா போட்டுருந்துச்சு. ஊர் எல்லையில கூட, ஒரு வெளம்பர பலகைய பாத்தேன். அதுலயும் அனைவரும் வாரீர்..னுதான் போட்டுருந்துச்சு.
நாம குருவிக்காரங்க சாமி..
அதுனால யென்னம்மா? சாமியதான வேண்ட போறோம்..
அது ஒனக்கு சொன்னா புரியாது சாமி. அதவுடு, ஒனக்கு பசிக்கிதுன்னு சொன்னியேடியம்மா..
ஆமாம்மா ரொம்ப பசிக்கிது..
உங்க நைனா நிக்கிற ஜூஸ் கடையாண்ட போயி, கொஞ்சம் ஜூஸ் குடிச்சிட்டு வா. சரியா பூடும்..
பசியின் உந்துதலால் தன் தந்தை வேலை செய்துகொண்டிருந்த கரும்புச்சாறு கடையை நோக்கி ஓடினாள் ஜோதி. அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்புக் கட்டிலிருந்து இரண்டு கரும்புகளை பிரித்தெடுத்து கொண்டிருந்தார் ஜோதியின் தந்தை நாகமணி.
அண்ணே! ஒரு கரும்பு ஜூஸு..
திரும்பிப் பார்த்த நாகமணி, அடடே ஜோதிக்கண்ணு! என்னடியம்மா நெக்கலு ஒனக்கு. எம்புள்ள கொரலு எனக்கு தெரியாதா..
நீ புத்திசாலி நைனா..யென நாகமணியின் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.
நைனாவுக்கே ஐஸ் போடுறியா.இருடியம்மா ஜூஸ் போட்டு தரேன்.குடிச்சிட்டு போ..
அதுக்குத்தான் நைனா வந்தேன். சீக்கிரம் போட்டுக்குடு நைனா..
இந்தா போட்றேன் பாரு..
ஜெனரேட்டரின் லிவரை இழுத்ததும் டங்கு..டங்கு..டங்குவென அதிர்வுடன் ஓடத் துவங்கியது அந்த கரும்பு மெஷின். இரண்டு உருளைகள் எதிரெதிர் திசையில் ஒன்றோடொன்று உரசி சுழன்றுகொண்டிருக்க, அவற்றிற்கிடையில் இரண்டு கரும்புகளையும் ஒருசேரவைத்து நுழைத்தார் நாகமணி. முழுமையாக வெளிவந்த கரும்புச் சக்கைகளை இரண்டாக மடக்கி, அவற்றுடன் சிறு எலுமிச்சைத் துண்டு மற்றும் வெட்டி வைத்திருந்த ஓரிரு இஞ்சித் துண்டுகளை சேர்த்து மீண்டும் உருளைகளுக்கிடையில் செலுத்தினார். சிறிது அனத்தலுடன் சாறு பிழியப்பட்டதும் இறுதியாக கரும்புச்சாறு சேகரமான பாத்திரத்தை கையிலெடுத்தார் நாகமணி.
நைனா ஐஸ் போடு நைனா..
போடுறேன் சாமி..
ஒரு கண்ணாடிக் குவளையில் ஐஸ் கட்டிகளை தட்டியிட்டு, பின் கரும்புச்சாறை வடிகட்டி வைத்து நிரப்பினார்.
இந்தாடியம்மா வயிறுநெம்ப குடி..
நைனா, சூப்பராக்கீது நைனா..
நல்லா குடி சாமி.. புன்னகையுடன் நின்றார் அவர்.
ஜூஸோட சேத்து கெளாஸையும் குடிச்சிடாதடியம்மா.. என்கிற திடீர்க் குரலுடன் வந்துநின்றான் ஜோதியின் அண்ணன் தவசிமணி. அவனது முதுகில் மென்மையாக ஒரு குத்துவிட்டாள் ஜோதி. கரும்புச்சாறின் அளவு, தீர்ந்துவிடும் நிலையிலிருந்த கண்ணாடித் தம்ளரை, மேலுயர்த்தி தலைகீழாக கவிழ்த்தாள். அடுத்தடுத்து ஒன்றிரண்டு சொட்டுகள் அவளது நாவில் வழுக்கி விழுந்தன.
வா சாமி தவசி! ஸ்கூலுக்கு போனியே ரிசல்ட்டு என்னாச்சு சாமி..
நைனா, பாஸாயிட்டேன் நைனா..
சந்தோசன்டா சாமி. எல்லாம் அந்த ஈஸ்வரி தேவியோட அருளு. நீ மகராசனா நல்லாருப்ப. இந்தா சாமி! இந்த ஜூஸக் குடி. எனக்கு சந்தோசம் குதியாட்டம் போடவக்கிது. நீங்க ரெண்டுபேரும் இங்கயே நில்லுங்க சாமி. நான் உங்கம்மாவ இட்டுவரேன்.
இத்தனை நாட்களின் மனப் போராட்டத்திற்கு, ஒரு வழி கிடைத்ததுபோல நாகமணி தன் மகனின் தேர்ச்சியை கொண்டாடத் துவங்கினார்.
அடியே ராசாத்தி விசயந்தெரியுமா?..
இன்னா மாமா. கன்னுக்குட்டி மாரியே ஓடிவர நீ..
அடிச்சிறுக்கி. நம்ம புள்ள தவசி பரிச்சையில பாஸாயிட்டான்டி..
இதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல், கண்களில் நீர்ததும்ப நின்ற இராசாத்தி. தனது கணவனின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு வணங்கினாள்.
நம்ம கஷ்டமெல்லாம் கொஞ்சநாள்ல தீந்திடும் புள்ள. தவசிய எப்டியாச்சும் மேல்படிப்புல சேத்துவுடனும். நீ இன்னா சொல்ற..
தலையை மட்டும் அசைத்த இராசாத்தி கண்ணீரை துடைத்துக் கொண்டாள். பின் இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் செல்ல, தன் மகனை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டாள். “அந்த ஈஸ்வரி தேவியோட தொணை ஒனக்கு எப்பவும் இருக்கும் சாமி. மகராசனா இருப்ப..” என்றாள்.
அன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும், தவசியின் மேற்படிப்பை பற்றிய சிந்தனையுடனாகவும் நகர்ந்தது. மாலை பெரியமாரியம்மன் கோவிலுக்குச் சென்ற ஜோதியும் இராசாத்தியும் திருவிழா கூட்டத்தினிடையே வியாபாரத்தை நிகழ்த்திவிட்டு, அம்மனை தூரநின்று வணங்கியவுடன், தாங்கள் குடியிருக்கும் தெருவிற்கு வந்தனர்.
சாமி தவசி, மேல என்ன படிக்கலாம்னுக்கீற சாமி..
இன்ஜினியருக்கு படிக்கலாம்னுக்கீறேன் நைனா..
அதுக்கு நெறைய துட்டு வேணுமே சாமி..
இல்ல நைனா, நான் எடுத்த மார்க்குக்கு கவுன்சிலிங் மூலமா போலாம் நைனா. அதுல போனா ஃபீஸு கம்மிதான்.
கவுன்சிங்கா! அப்டீன்னா..
அதுவா நைனா, நம்ம அரசாங்கம் குடுத்துறுக்குற ஒதுக்கீடு மூலமா போறது நைனா..
இப்டி வேற ஒன்னுக்கீதா, சரிதான். அப்டீனா நீ கவுன்சிங்கு மூலமாவே போ..
கவுன்சிலிங் போறதுக்கு முன்னாடி ஒரு பார்ம் வாங்கி, அத நெரப்பி மெட்ராஸ் யுனிவர்சிட்டிக்கு அனுப்பனும் நைனா. அதுகூட மத்த சட்டிபிக்கேட்டு நகலெல்லாம் நெறைய வச்சு அனுப்பனும். வாத்தியாரு, கவுர்மென்டு ஆபீஸருனு ரெண்டு மூணுபேர் கிட்ட கையெழுத்து வாங்கி அனுப்பனும். பெரிய வேலக்கீது நைனா.
இம்மா வேலக்கீதா அதுல. மேல்படிப்புனா சும்மாயில்ல போல, அந்த பாமுக்கு எவ்ளோ ஆகும் சாமி..
ஐந்நூறுவா ஆகும் நைனா..
ஐந்நூறுவாயா.. சரி அப்போ ஒரு மூணுநாள் பொறுத்துக்கோ சாமி. நைனா ஒனக்கு ரிடி பன்றேன்.
நைனா அண்ணன மேல்படிப்புல சேத்ததும், எனக்கு ஒரு கழுத்துச்செயினு வாங்கி தரியா?..
அதென்னடியம்மா செயினு. அதுக்கு எவ்ளோ ஆகும்..
வெல தெரியல நைனா. நம்ம பஸ் ஸ்டேண்டாண்ட இருக்குதே ஒரு நெகைக் கட, அங்க ஒரு வெளம்பர பலகையில ஒரு நடிக இருக்கும் நைனா. அது கழுத்துல மாட்டிருக்குற மாரி செயினு வேணும்.
அம்மாடியோவ்! கரும்பு மிஷினயே விக்கனும் போலயே சாமி..
நெக்கல் பண்ணாத நைனா..
உங்கண்ணன் தவசி, மொதல்ல மேல்படிப்புல சேரட்டும் சாமி. அப்புறம் நைனா ஒனக்கு அந்த செயின வாங்கித் தரேன். இன்னா..
ஐ! என் செல்ல நைனா..யென்று கன்னத்தை கிள்ளினாள்.
மூன்றுநாட்கள் கழித்து தவசியிடம் ஐந்நூறு ரூபாயை வழங்கினார் நாகமணி. அதனை பெற்றுக் கொண்டு தான் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கிவந்தான் தவசி. தனது ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தான்.
விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய பிற சான்றிதழ்களின் நகல்களை பிரதியெடுத்து, அவற்றில் சான்றழிப்பு கையொப்பத்தை தனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றுக் கொண்டான். பிறகு விண்ணப்ப படிவத்தில் வாங்க வேண்டிய முக்கியமான கையொப்பமொன்று அரசு அதிகாரி ஒருவரிடம் வாங்க வேண்டியிருந்தது. அதற்காக அரசு வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தகுந்த அதிகாரியிடம் விண்ணப்பத்தை வழங்கினான். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட அவ்வதிகாரி, கையூட்டு வழங்கினால்தான் கையொப்பமிடுவதாக கூறவே, அவரிடம் கெஞ்சி மன்றாடினான்.
ஒனக்கு சொன்னா புரியாதா தம்பி, காசு குடு கையெழுத்து போடுறேன்..
சார்! இந்த பார்ம் வாங்கவே ரொம்ப கஷ்டப்பட்டுதான் சார் வாங்குனேன். இப்போ என்கிட்ட காசு ஏதுமில்ல சார்..
காசில்லனா காக்கா குருவிய சுட்டு பொழைக்க வேண்டியது தான, எதுக்கு மேல்படிப்பு படிக்க ஆசைப்படுற?..
சார்! ப்ளீஸ் சார், தயவுசெஞ்சு கையெழுத்து போட்டு குடுங்க சார்..
இத பாரு தம்பி, இங்க நின்னு என் நேரத்தை வீணடிக்காத. எனக்கு நெறைய வேலை இருக்குது. நீ கெளம்பு மொதல்ல..
தன் உதவியாளரை அழைத்து தவசிமணியை வெளியேற்றினார் அவ்வதிகாரி. இப்படியாக பலநாட்கள் அவன் அரசு அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் சென்றபடி இருந்தான்.
ஒருகட்டத்தில் அவனிடம் கையூட்டு பெற இயலாதென உணர்ந்த அவ்வதிகாரி, மனமிறங்கியவர்போல் இறுதியாக அவ் விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட்டார். நன்றிகூறி நகர்ந்த தவசிமணி, பிறகு விண்ணப்ப படிவத்தை தபாலில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தான். குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்ப படிவம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு சென்றடையவில்லை. இரண்டு நாட்கள் தாமதமாகவே, அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் அடுத்த வருடம்தான் விண்ணப்பிக்க முடியும். அதுவும் நிறைவேறுமா என்கிற ஏக்கத்துடன், தன் தந்தையுடன் சேர்ந்து கரும்பு மெஷினில் சாறுபிழிந்து கொண்டிருந்தான் தவசிமணி. வெளிவந்த சக்கைகளை இரண்டாக மடக்கி மீண்டும் உருளைகளுக்கு இடையில் செலுத்தினான்.
மறுபுறம், ஜோதி அந்த நகைக்கடை விளம்பரப் பலகையை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தாள்.
முற்றும்.
ஆ.கிருஷ்ணதாஸ்