காட்டுவழிப் பாதை:
##################
இலைநரம்புகளி லூறும்
புழுவாயொரு வனவலம்...!
குளுமை யுணர்ந்த தருணமதில்
குடிகொண்ட குதூகலத்தால்,
வளைந்து நெளிந்தாடி
ஓட்டுனராகின பாதங்கள்...!
நடத்துனரான கண்களுக்கோ
ஆங்காங்கே நிறுத்தங்கள்...!
குரங்கான மனமோ
அங்குமிங்கும் தாவ,
ஒற்றையடி பாதையிலே
ஓசை யெழுப்பும் சருகுகள்...!
முட்போர்வை யுடுத்திய
கதகதப்பில், மல்பெரியை
கொறிக்கும் கம்பளிப் பூச்சி...!
கிளை யுடைந்த
பலாமரத்தின் சோர்வுக்கு,
களிறின் சாணமே
சாட்சி யாகின்றன...!
அருகத விதைகள்
விழு மிடத்தின் மேலே
குத்தவைத்திருக்கிறார்;
கரடி யார்...!
அச்சத்தை அழைத்தது
பெரும்பூனைகளின் வரவு;
மண்ணில் பதிந்திருந்த
கால்தடம் பார்த்து...!
கொறித் தெடுக்கும் அணிலாரும்
குடைந் தெடுக்கும் குருவியாரும்
திறப்புவிழா நிகழ்த்துகிறார்கள்;
கொய்யாப் பழத்தினில்...!
மண்ணுருண்டை நகர்த்தலிலே
உடம்புவலி வந்தாலும்,
கவலைவேண்டாம் வண்டாரே...!
பட்டைக ளுரிந்து நிற்கின்றார்!
உயர்ந்த மனிதன் யூகலிப்டஸ்,
வலிபோக்கும் அருமருந்தாம்
பாட்டி சொன்ன நியாபகமுண்டு...!
பூக்களைத் தொட
அனுமதி யில்லை;
தேனீக்களின்
கொடுக் கறிக்கை...!
தொடத் தானே
காத்திருக்கிறாள்;
தொட்டவுடன்
வெட்கங் கொள்ளும்
தொட்டாற் சிணுங்கி...!
இரசிக்க மட்டுமே
அனுமதி; இரசனை
மிகுந்தால் வெகுமதி...!
காட்டுவழிப் பாதையிலே
வெந்நிற ஆடையும்,
வண்ணம்பூசிக் கொண்டது
எந்தன் மனதைப் போலே...
ஆ.கிருஷ்ணதாஸ்...
PC:Google search [jooinn.com]

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக