சிறுகதை:
புகையும் நெருப்பும்
முத்துராம் சார்! இங்க வாங்க, தீ விபத்துக்கு என்ன காரணம்னு கடைக்காரர்கிட்ட
விசாரிச்சீங்களா?
விசாரிச்சேன் சார்! ஆனா, எந்த க்ளூவும் கெடைக்கல. ராத்திரி கடைய அடைச்சிட்டு
போன மனுசன், மறுநாள் காலையில வந்து பாக்கும் போது கடை முழுசா தீயில கருகி இருந்துச்சு.
கடையில இருக்கிற மொத்த சரக்கும் எரிஞ்சு போச்சு சார்...
எவன் பண்ண வேலையோ...?
அக்கம் பக்கத்திலயும் விசாரிச்சாச்சு சார்! யாருக்கும் எப்படி நடந்துச்சுன்னு
தெரியல. ஆனா ஒன்னு, இந்த மாதிரி தீ விபத்து நிறைய இடத்துல நடந்திருக்கு சார். இன்னுமே
இதுக்கெல்லாம் என்ன காரணம்? யாரு பன்றாங்கனும் தெரியல சார்...
சரிங்க முத்துராம், கடைக்காரர்கிட்ட ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கோங்க.
தேவைப்பட்டால் விசாரணைக்கு வர சொல்லிக்கலாம், அவரோட நம்பரையும் எழுதி வாங்கிக்கோங்க.
சரிங்க சார்....
பின்பு, தீ விபத்துக்குள்ளான கடையை நன்றாக நோட்டமிட்டார் காவல் ஆய்வாளர்,
ஆதிபகவன். ஆறடி கம்பீரம் காக்கி உடையில் வருவது போல் இருக்கும் ஆய்வாளர் ஆதிபகவனின்
தோற்றம். பணிமாற்றமாகி பதவி உயர்வுடன் புதியதாக பணியில் சேர்ந்திருந்தார்.
ஏதேனும் துப்பு கிடைக்குமா? என தேடிக் கொண்டிருந்த அவருக்கு இறுதியில்
கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே! பின் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு கிளம்பிச் சென்றார்.
இப்படி ஒரு சம்பவத்தால், இந்த விசாரணை அவருக்கு பெரும் சவாலாக அமைந்தது. தீ எப்படி
பிடித்திருக்கும்? என்ற தீவிர சிந்தனை அவரிடத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
சிந்தனையிலேயே காவல் நிலையம் வந்தடைந்ததும் தனது அறையை நோக்கி நகர்ந்தார்.
எஸ்ஐ டேவிட் சார்! கொஞ்சம் இங்க வாங்க...
சொல்லுங்க சார்!
இது வரைக்கும் பென்டிங்ல இருக்குற தீ விபத்து சம்பந்தமான ஃபைல்ஸ என்னோட
டேபிளுக்கு கொண்டுவாங்க...
சரிங்க சார், இதோ எடுத்துட்டு வர்றேன்...
சிறிது நேரத்தில் கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து
எண்ணிலடங்கா கோப்புகளை, நான்கு காவலர்களுடன் சேர்த்து எடுத்துக்கொண்டு காவல் ஆய்வாளரின்
அறைக்குள் நுழைந்தார் உதவி ஆய்வாளர் டேவிட்.
டேவிட் சார், என்ன இது?
சார்! நீங்க கேட்ட தீ விபத்து சம்பந்தமான ஃபைல்ஸ் தான் சார்...
இத்தனை ஃபைல்ஸா? இவ்ளோ கேஸஸ், பென்டிங்ல இருக்கா?
ஆமா சார்! கடந்த பத்து வருஷத்துல நெறைய தீ விபத்து நடந்துருக்கு சார்.
நீங்க இந்த ஸ்டேஷனுக்கு வரதுக்கு முன்னாலேயே நெறைய கேஸஸ் ஃபைல் ஆயிருக்கு சார். குடிசையை
கொளுத்துனது, குப்பையை கொளுத்துனது, நகைக் கடைய கொளுத்துனது, துணிக்கடையை கொளுத்துனது-னு
ஏகப்பட்ட கேஸஸ் ஃபைல் ஆயிருக்கு சார். இத்தனை கேஸுலயும் விபத்து எப்படி நடந்துச்சுன்னு
தெளிவான துப்பு இன்னும் கெடைக்கல சார். அக்கம் பக்கத்துல விசாரிச்சாலும் ஆளுக்கொரு
கதை சொல்றாங்க சார்...
அதுக்குன்னு இவ்வளவு கேஸஸ் பென்டிங்ல இருக்கனுமா, தீவிரமா விசாரிக்க
வேண்டியது தான?
என்ன சார் பண்றது, இதுல பாதி கேஸுல அரசியலும் இருக்கு சார். வட்டம்,
மாவட்டமுனு ஏகப்பட்ட பிரச்சனை...
ம்....சரி இருக்கட்டும். இந்த ஃபைல்ஸ்ல, கடைசி மூணு மாசத்தோட பைல்ஸ
மட்டும் எடுத்துக் குடுங்க. அப்படியே ஏட்டு முத்துராம் சார் கிட்ட ஸ்டேஷனுக்கு சீக்கிரமா
வரச் சொல்லுங்க…
ஓகே சார்! உடனே சொல்றேன்.
சிறிது நேரம் கழித்து காவல் நிலையத்திற்குள் நுழைந்தார், தலைமை காவலர்
முத்துராம். அதேசமயம் உதவி ஆய்வாளர் டேவிட், ஏழு கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு
ஆய்வாளர் ஆதிபகவனிடம் சென்றார்.
சார்! கடந்த மூணு மாசத்துல மட்டும் ஏழு கேஸஸ் ஃபைல் ஆயிருக்கு சார்.
சரிங்க டேவிட் சார், அந்த ஃபைல்ஸ முத்துராம் சார்கிட்ட குடுங்க. நாங்க
விசாரணைக்காக வெளிய போகணும். நீங்க ஸ்டேஷனை பாத்துக்கோங்க...
ஓகே சார்...
முத்துராம் சார்! இந்த ஏழு ஃபைல்ஸ உங்க கையிலயே வச்சுக்கோங்க. இந்த
விசாரணை முடியுற வரைக்கும் என் கூடவே இருங்க.
சரிங்க சார்.... என தான் பெற்றுக்கொண்ட ஏழு கோப்புகளையும் இறுக்கிப்
பிடித்தார், முத்துராம்.
முத்துராம் சார்! அந்த மளிகைக் கடைக்காரரோட ஸ்டேட்மெண்ட குடுங்க...
இந்தாங்க சார்...
வாசித்துவிட்டு…….., “அவரோட பேரு கண்ணன். கடையை பூட்டிட்டு போயிருக்காரு!
காலையில ஆறு மணிக்கு வந்து பாத்தா! கடை சாம்பலாயிருக்கு.” இந்த எட்டு மணி நேர கேப்புல
எவனோ ஏழரைய இழுத்துருக்கான். என்னவா இருக்கும்...?
அந்தக் கடைக்காரருக்கு யாராச்சும் எதிரிங்க இருக்காங்களா? இல்ல யாரு
மேலயாச்சும் சந்தேகம் இருக்குன்னு சொன்னாரா, முத்துராம் சார்...?
அப்படியெல்லாம் எதுவுமே இல்ல சார்! அந்த ஆள பாத்தாலும் வம்பு தும்புக்கு
போற மாதிரி தெரியல...
ம்...சரி! வண்டியில ஏறுங்க, நாம வெளிய கொஞ்சம் விசாரணைக்கு போயிட்டு
வரலாம்.
ஓகே சார்...
காவல் நிலையத்திலிருந்து கடமையை நோக்கி பயணித்தது, காவல்துறை வாகனம்.
பயணத்தின் ஓட்டுனராய் வெங்கட்.
முத்துராம் சார்! அந்த ஏழு ஃபைல்ஸயும் குடுங்க,
இந்தாங்க சார்...
இந்த ஏழு தீவிபத்து சம்பந்தமா உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
சார்! அதாவது, இந்த முதல் ஃபைல்ல இருக்குற கேஸ பத்தி சொல்லணும்னா, இது
ஒரு பஞ்சு குடோன்ல நடந்தது சார். அங்க வேலை செஞ்சுட்டு இருந்த எல்லாரும் மதியம் சாப்பிட
போன நேரத்துல இந்த விபத்து நடந்ததா சொல்றாங்க சார். ரொம்ப வேகமாக தீ பரவுனதுனால, எந்த
எடத்துல தொடங்குச்சுனு தெரியல சார்...
ம்...சரி! ரெண்டாவது கேஸ பத்தி சொல்லுங்க,
சார்! அது வந்து ஒரு குப்பை கொட்டுற எடத்துல நடந்த விபத்து சார். அந்த
கேஸுல குப்பை கொட்டுற எடத்த சுத்தி இருக்குற, முள்ளுக்காடு முழுசா எரிஞ்சு போச்சு.
அது மட்டும் இல்ல நெறைய தெரு நாய்களும் செத்துப் போயிருக்கு. இது ஒருத்தர் குடுத்த
பொதுநல வழக்கு சார்.
ஓகே...அடுத்து,
சார்! இந்த மூணாவது கேஸ பத்தி சொல்லனும்னா, ரெண்டு குடும்பத்தோட குடிசை
எரிஞ்சு போனது சார். நைட்டுல வீட்டு ஆளுங்க எல்லாரும் தூங்கிட்டு இருக்கும்போது நடந்த
விபத்து. இதுல ரெண்டு குடிசையும் எரிஞ்சு போச்சு சார். குடிசையில எப்படி தீ புடிச்சிதுனு
யாருக்குமே தெரியல! தீயணைப்பு வண்டி வர்றதுக்குள்ள ரெண்டு குடிசையும் எரிஞ்சு சாம்பலாயிருச்சு
சார்.
அப்போ, குடிசையில இருந்த ஆளுங்க...!
அவங்களுக்கு ஒன்னும் ஆகல சார்! அந்த வீட்டுக்காரங்க குடுத்த கேஸ் தான்
சார் இது...
என்னங்க சார்! மூணு கேஸும் மொட்டையா இருக்கு,
ஆமா சார்! இத பத்தி விசாரிக்கவே ரொம்ப குழப்பமா இருக்குது சார்...
சரி, இருக்கட்டும்... வெங்கட் வண்டிய அந்த டீக்கடை பக்கம் நிறுத்துங்க!
டீ குடிச்சிட்டு போகலாம்.
சரிங்க சார்...
வாகனம் தேநீர் கடையின் ஓரமாக நின்றது. மூவரும் தேநீர் பருக ஆரம்பித்தனர்.
அச்சமயம், ஓட்டுநர் வெங்கட் புகை பிடிக்க அனுமதி கேட்டுச் சென்றார். ஒரு கையில் தேநீரும்,
மறு கையில் சிகரெட்டும் என ரசித்து ருசித்துக் கொண்டிருந்தார். ஆய்வாளர் ஆதிபகவனும்,
தலைமை காவலர் முத்துராமும் உரையாடத் தொடங்கினர்.
மத்த நாலு கேஸஸ் பத்தி சொல்லுங்க! முத்துராம் சார்...
மத்த நாலு கேஸ பொறுத்தவரையில! ரெண்டு ஜவுளிக்கடை, ஒரு நகைக்கடை, அப்புறம்
ஒரு பெயிண்ட் கடை சார்! இந்த நாலுமே நைட்டு ஆளில்லாத நேரத்துல நடந்த விபத்து தான் சார்.
இந்த நாலு கேஸுமே முதல் மூணு கேஸு மாதிரி தான் சார்! எப்படி நடந்துச்சுன்னு தெரியல...
இத வச்சு பாக்கும்போது, முதல் கேஸ தவிர, மீதியெல்லாம் நைட்டுல நடந்தது...
ஆமா, சார்! நீங்க சொல்றது சரிதான்...
கடைசியா எரிஞ்சுபோன மளிகைக் கடை விபத்தும் நைட்டுலதான் நடந்துருக்கு!
அப்போ இதுதான் நமக்கு கெடைச்ச முதல் க்ளூ,"எல்லா விபத்தும் கிட்டத்தட்ட நைட்டுல
நடந்துருக்கு"
ஆமா, சார்! இப்போ என்ன பண்றது...?
இந்த கேஸஸ்ல, ஏதாச்சும் சிசிடிவி ஃபுட்டேஜஸ் கெடைச்சிருக்கா...?
ரெண்டு இடத்துல கெடைச்சிருக்கு சார்! ஒன்னு குப்பை கொட்டுற இடத்துக்கு
எதிருல இருக்குற மாநகராட்சியோட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சார்! இன்னொன்னு
நகைக் கடை விபத்துல, அந்த கடையோட கண்காணிப்பு கேமராவுல பதிவான காட்சி சார்.
சரிங்க முத்துராம்! வாங்க அது ரெண்டையும் போயி பாக்கலாம். ஹலோ வெங்கட்!
வாங்க வண்டிய எடுங்க,
சார், இதோ வந்துட்டேன் சார்.... என அவசர அவசரமாக கையிலிருந்த சிகரெட்டை
தூக்கி எறிந்துவிட்டு, வண்டியை எடுக்க ஓடிவந்தார், வெங்கட்.
வெங்கட்! ஏன் சிகரெட்டை அணைக்காமல் வீசிட்டு வர்றீங்க? அதுமூலமா எதாவது
தீப்பிடிச்சிதுணா? போயி அத அணைச்சிட்டு வாங்க...
சாரி சார்! நீங்க கூப்ட அவசரத்துல வந்துட்டேன் சார்...
வெங்கட் சென்று அணைப்பதற்குள், வீசப்பட்ட இடத்திலிருந்து ஒரு அடி தள்ளி
உருண்டு கொண்டிருந்தது அந்த சிகரெட் துண்டு. அணைத்துவிட்டு வண்டியை எடுக்க சென்றார்,
வெங்கட்.
எப்போதும் சிகரெட் துண்ட கீழே போட்டா, அணைச்சிட்டு போடுங்க! அவசரத்துல
தூக்கி வீசாதீங்க...
சரிங்க சார்...
பின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.
முத்துராம் சார்! நேத்து நைட் தீ விபத்து நடந்ததுல சில விஷயம் நாம தெரிஞ்சுக்க
வேண்டி இருக்கு. அதனால அந்த கடைக்காரர்கிட்ட நாளைக்கு ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க...
சரிங்க சார்...
"வெங்கட், வண்டிய ஸ்டேஷனுக்கே விடுங்க..."
வாகனம் காவல் நிலையம் நோக்கி சென்றது.
கண்காணிப்பு கேமராவில் பதியப்பட்ட இரண்டு விபத்துக்களின் காட்சிகளை
தீவிரமாக கவனித்தார் ஆதிபகவன். பின் அதிலிருந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றை
முத்துராமிடம் கொடுத்தார்.
அடுத்து, என்ன பண்ணப் போறோம்? சார்.
குப்பை கொட்டுற இடத்துல நடந்த தீ விபத்த பத்தி விசாரிக்க போறோம். அதனால,
அந்த எடத்துக்கு போகலாம் வாங்க...
வெங்கட் வண்டிய எடுங்க.... வாகனம் குப்பை கொட்டும் இடத்தை நோக்கி விரைந்தது.
குப்பை கொட்டும் இடத்தை அடைந்ததும், அங்குள்ள அக்கம் பக்கத்தினரிடம்
விசாரணை மேற்கொண்டார் ஆதிபகவன். அங்கு பெறப்பட்ட தகவல்களை எழுதிக்கொண்டார் முத்துராம்.
பின் அங்கிருந்து புறப்படத் தயாராகினர்,
முத்துராம் சார்! அந்த விபத்து நடந்த நகைக் கடை எங்க இருக்கு?
லால் கடைவீதியில இருக்கு சார்...
வண்டிய அந்த இடத்துக்கு விடுங்க, வெங்கட்!
நகை கடையை நோக்கி நகர்ந்தது வாகனம். அங்கு சென்றடைந்ததும் நகைக் கடைக்கு
அருகில் உள்ள துணிக்கடை, பூக்கடை, பெட்டிக் கடை என ஒவ்வொருவரிடமும் விசாரணை மேற்கொண்டார்
ஆதிபகவன். முத்துராமின் கரங்கள் தகவல்களை காகிதத்தில் சேமித்துக் கொண்டிருந்தது.
விசாரணை முடிவடைந்ததும், அங்கிருந்து காவல் நிலையத்திற்கு புறப்பட்டுச்
சென்றனர்.
முத்துராம் சார்! இந்த ரெண்டு கேஸோட ஸ்டேட்மெண்ட்ஸ், அப்புறம் நேத்து
நடந்த விபத்தோட ஸ்டேட்மெண்ட், இது மூணையும் எங்கிட்ட குடுங்க! நான் கொஞ்சம் தனியா யோசிக்கணும்,
அதனால வீட்டுக்கு கிளம்புறேன். வேற ஏதாவது முக்கியமான விசயம் சொல்லனும்னா கால் பண்ணுங்க.
சரிங்க சார்...
டேவிட் சார்! நைட் டியூட்டியில, ஸ்டேஷன நீங்க பாத்துக்கோங்க. நான் காலையில
வர்றேன்.
ஓகே சார்! நான் பாத்துக்குறேன்…
வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்திலிருந்து புறப்பட்டார் ஆய்வாளர் ஆதிபகவன்.
அன்றிரவு யோசனையில்…, இந்த மூணு கேஸுக்கும் பொதுவான விஷயம் ராத்திரியில
நடந்தது மட்டும்தான். அதேசமயம், விபத்து நடந்த நேரத்துல யாருமே பக்கத்துல இல்ல. எங்கேயோ
இடிக்குதே...? என யோசித்துக்கொண்டே உறங்கிவிட்டார் ஆதிபகவன்.
மறுநாள் காலை, டுபு...டுபு... சத்தத்துடன் காவல் நிலையத்தை நோக்கி விரைந்தார்,
ஆதிபகவன்.
காவல்நிலையத்தில்…, சார்! நீங்க வரச் சொன்ன, அந்த மளிகைக் கடைக்காரர்
வந்திருக்கார் சார்...
வரச்சொல்லுங்க, முத்துராம் சார்...
ஐயா, உங்கள இன்ஸ்பெக்டர் உள்ள வரச்சொன்னாரு...
காவல் ஆய்வாளர் அறைக்குள் நுழைந்தார், கண்ணன்.
வணக்கம், சார்...!
வணக்கம், மிஸ்டர் கண்ணன்! உட்காருங்க...
பரவாயில்ல சார், இருக்கட்டும்...
அட உட்காருங்க, சார்...
சார், என்னைய விசாரணை பண்ணனும்னு வரச் சொன்னீங்களாம்! ஏட்டையா சொன்னாரு...
ஆமா, மிஸ்டர் கண்ணன்! உங்க கடைய எத்தனை மணிக்கு மூடுனீங்க?
நைட்டு பத்து மணி இருக்கும், சார்...
கடைய அடைச்சிட்டு உடனே கெளம்பிட்டீங்களா?
இல்ல சார்! கற்பூரம் கொளுத்தி, சாமி கும்பிட்டு, அப்புறம் தேங்காய்
ஒடைச்சிட்டு தான் போனேன் சார்...
நீங்க கெளம்பும்போது அக்கம் பக்கத்துல யாராச்சும் இருந்தாங்களா? ஆள்நடமாட்டம்
இருந்துச்சா?
என்னோட கடைக்கு எதிருல ஒரு பெட்டிக்கடை இருக்கு சார். அந்த கடைக்காரர்
மட்டும் தான் இருந்தார். அவரத் தவிர, வேற யாரும் அந்த நேரத்துல இல்ல சார்...
சரி! அந்த கடைக்காரர் பேர் என்ன?
தேனப்பன் சார்! எனக்கு தெரிஞ்சவர் தான்…
முத்துராம் சார்! இவர்கிட்ட தேனப்பனோட நம்பர் வாங்கி, உடனே அவர ஸ்டேஷனுக்கு
வரச் சொல்லுங்க.
ஓகே சார்...
கண்ணன் சார்! நீங்க வெளிய கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அப்புறமா கூப்பிடுறேன்.
தேனப்பனுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு காவல் நிலையத்திற்கு வரச்சொன்னார்,
முத்துராம். சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார் தேனப்பன். விசாரணை தொடர்ந்தது...
சொல்லுங்க மிஸ்டர் தேனப்பன்! நேத்து எத்தனை மணிக்கு கடைய அடைச்சீங்க...?
பத்தரை மணி போல அடைச்சேன், சார்...
தீ விபத்து நடந்த கடை, உங்களுக்கு எதிருல தான இருக்கு?
ஆமா சார்...
அவர் பத்து மணிக்கே கடையை அடைச்சிட்டு போயிட்டாரு, நீங்க அவரு போனதுக்கு
அப்புறம், அரை மணிநேரம் கழிச்சு போயிருக்கீங்க. இந்த அரைமணி நேரத்துல யாராவது அந்தப்
பக்கம் வந்தாங்களா?
ஆள் நடமாட்டம் அதிகமா இல்ல சார்! ஆனா, நான் கடைய மூடுறதுக்கு முன்னாடி!
ஒரு கருப்பு கலர் கார் வந்துச்சு, அதுல வந்த ஒருத்தர் என் கடையில நாலு சிகரெட் வாங்கினாரு
சார். அவருக்கு ஒரு நாற்பது வயசு இருக்கும், சிகரெட்ட அங்கேயே பத்த வச்சு புடிச்சிட்டு
இருந்தார். அப்புறம் நான் கடையை மூடலாம்னு போகும்போது, பைக்ல ஒரு இருபத்தஞ்சு வயசு
அளவுல ஒரு பையன் வந்தான்! அவனும் ஒரு சிகரெட் வாங்கி பத்த வச்சான் சார். அவங்கிட்ட
காசு வாங்குனதும் கடைய மூடிட்டு நானும் கெளம்பிட்டேன் சார். அதுக்கப்புறம் என்ன நடத்துச்சுன்னு
தெரியல சார்...
அவங்க ரெண்டு பேரோட முகம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
நல்லா ஞாபகம் இருக்கு சார்!
ஓகே, உங்க கடைக்கு பக்கத்துல ஏதாச்சும் சிசிடிவி கேமரா இருக்குதா?
என்னோட கடைக்கு பக்கத்துல இல்ல சார்! ஆனா வலது பக்கமா ஒரு ஆறு கடை தள்ளி
துணிக்கடை ஒன்னு இருக்கு அதுல, கேமரா மாட்டியிருக்காங்க சார். அதே மாதிரி இடது பக்கமா
சொல்லணும்னா, அந்த ரோட்டோட முடிவுல ஒரு பேக்கரி இருக்கு சார். அங்கேயும் கேமரா மாட்டியிருக்காங்க
சார்...
ஓ... அப்படியா! சரிங்க மிஸ்டர் தேனப்பன், நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி.
நாம எல்லாரும் இப்போ முதல்ல உங்க கடைக்கு போகணும், வாங்க கெளம்பலாம்.
அங்கிருந்து ஆய்வாளர் ஆதிபகவன், தலைமை காவலர் முத்துராம், ஓட்டுனர்
வெங்கட், கடைக்காரர்கள் கண்ணன் மற்றும் தேனப்பன் ஆகியோர் தேனப்பனின் பெட்டிக் கடையை
நோக்கி வாகனத்தில் சென்றனர்.
அங்கு சென்றதும், தேனப்பனின் பெட்டிக் கடையை நன்றாக நோட்டமிட்டார்,
ஆதிபகவன். பின்பு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கடைகளுக்கும் சென்று
பதிவான காட்சிகளையும் கவனித்தார். அவற்றிலிருந்து பதிவான காட்சிகளை விரலியில் (பென்டிரைவ்)
சேமித்துக் கொண்டார்.
முத்துராம் சார்! இந்த ஃபுட்டேஜஸ்ஸ பிரிண்ட் போட்டுட்டு வாங்க...
ஓகே சார்...
விரலியில் இருந்த காட்சிப் பதிவை குறுவட்டில் சேமித்துக் கொண்டு வந்தார்,
முத்துராம்.
இவங்க ரெண்டு பேருல ஒருத்தன் தான் குற்றவாளி! அவங்கிட்ட விசாரிச்சா
போதும் உண்மை தானா வந்துரும்.
எப்படி சார் சொல்றீங்க?
எங்கூட வாங்க, வண்டியில ஏறுங்க சொல்றேன்...
வாகனம் தேனப்பன் கடைக்கு முன் நின்றது. தேனப்பனை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து
புறப்பட்டது...
குற்றவாளியின் இடத்தை அடைந்ததும், அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்பு
அவன்தான் குற்றவாளி என்பது நிரூபணமாகி, கைது செய்யப்பட்டான்.
இரண்டு நாட்களுக்குப்பின் நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணையின்போது…, பெருமதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! காவல்துறை
ஆய்வாளர் ஆதிபகவன் அவர்கள் வழங்கிய தகவல்களின் படி கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு,
குமுதம் நகரில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் தீ விபத்து நிகழ்ந்து,
அச்சம்பவத்தில் கடை முழுவதும் தீக்கு இரையானது. இந்த வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர்
ஆதிபகவனும், அவருடன் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் முத்துராமும் தீர
விசாரித்ததன் அடிப்படையில் சில உண்மைகளும், அலட்சியங்களும் மற்றும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட
குற்றவாளி யார் என்பதை தெரிந்து கொள்வதற்கான பல தகவல்களும் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், இரண்டு நபர்களின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது… அதாவது,
மளிகைக் கடைக்கு எதிரில் தேனப்பன் என்பவர் பெட்டிக் கடை வைத்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த
அன்றிரவு, அவரது கடைக்கு சரியாக இரவு 10:15மணி அளவில் கருப்புநிற ஃபோல்க்ஸ் வாகன்
காரில் வந்த 42 வயதுடைய ஹென்றி என்பவர், நான்கு சிகரெட்டுகளை வாங்கியிருக்கிறார். அவரையடுத்து,
பத்து நிமிடம் கழித்து இருசக்கர வாகனத்தில் வந்த 25 வயது மதிக்கத்தக்க குணா என்ற இளைஞர்
சிகரெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த தகவலின் மூலம், பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, நடந்த உண்மை
என்னவென்று தெரியவந்துள்ளது. அதற்குரிய சாட்சியான இந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை
காணும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
காணொளி காட்சி இடப்பட்ட தருணத்தில்,
மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே! முதல் காட்சியில் தாங்கள் காண்பது,
கருப்புநிற கார் சாலையினுள் நுழைவது, அதாவது ஹென்றி அவர்கள் வருவது பேக்கரி கடை ஒன்றின்
கண்காணிப்பு கேமராவில் பதிவானது...
இரண்டாவது காட்சியில் தாங்கள் காண்பது, இருசக்கர வாகனம் சாலையின் மறுபுறத்தில்
உள்நுழைவது, அதாவது இளைஞர் குணா வருவது துணிக்கடை ஒன்றின் கண்காணிப்பு கேமராவில் பதிவானது...
மூன்றாவது காட்சியில் தாங்கள் காண்பது, இளைஞர் குணா புகைபிடித்துக்
கொண்டே இருசக்கர வாகனத்தை தான் வந்த திசையிலேயே ஓட்டிச் சென்றுள்ளார். இக்காட்சி அதே துணிக்கடையின்
கண்காணிப்பு கேமராவில் பதிவானது...
நான்காவது காட்சியில் தாங்கள் காண்பது, ஹென்றி அவர்கள் தனது காரில்
துணிக்கடையை வேகமாக கடந்தபோது, கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இறுதியாக புகைப்படம் ஒன்றை தங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். இதில் நன்றாக கவனித்தோமானால்
மூன்று புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள் கீழே கிடப்பது போன்ற காட்சி. அதாவது, ஹென்றி
அவர்கள் புகைத்தது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நான்கு சிகரெட்டுகள்
வாங்கிய ஹென்றி! நான்கு சிகரெட்டுகளையும் அடுத்தடுத்து புகைத்திருக்கிறார். இதில் முதல்
மூன்று சிகரெட்டுகளை பெட்டிக் கடைக்கு அருகில் உள்ள சுவற்றில் தேய்த்தவாறு அணைத்து
கரையாக்கிவிட்டு கீழே போட்டுள்ளார். அந்த காட்சி தான் இது.
அவர் நான்காவது சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு அலைபேசி
அழைப்பு வந்துள்ளது. அதாவது, அவரது மனைவி அழைத்துள்ளார். அங்கிருந்து உடனடியாக கிளம்ப
எண்ணிய அவர், அவசரத்தில் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை சாலையில் எறிந்துவிட்டுச்
சென்றுள்ளார். “வீசியெறியப்பட்ட அந்த சிகரெட் துண்டு காற்றினால் சாலையில் உருண்டு சென்று,
மளிகை கடையில் தாழ்வாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் நெருப்பை பற்ற வைத்துள்ளது”.
சுவரொட்டியில் பிடித்த தீ கடையில் தொங்கவிடப்பட்ட கயிற்றிலும் பிடித்து, அந்த கயிற்றின்
மூலம் மரத்தினால் செய்யப்பட்ட மேற்கூரையிலும் பிடித்துள்ளது. இப்படியே பரவிய தீ கடையில்
உள்ள அனைத்து பொருட்களையும் எரித்துள்ளது. நள்ளிரவில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட
அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையை அழைத்து நெருப்பை அணைத்துள்ளனர்.
இந்த காரணங்களின் அடிப்படையில் தான் குற்றவாளி, ஹென்றியாக இருக்கலாம்
என்ற சந்தேகம் எழுந்தது. பிறகு, அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்தான் குற்றவாளி
என்ற உண்மையும் தெரிய வந்துள்ளது. ஆகையால் இக்குற்றம் அறியாமையில் நடந்திருந்தாலும்
வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு அலட்சியத்தினால் தான் குப்பை கொட்டும்
இடத்திலும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ தீ விபத்துக்களுக்கு
ஹென்றி போன்றவர்களின் அலட்சியமும் காரணமாக இருக்கலாம். எனவே குற்றவாளியான ஹென்றிக்கு
தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்...
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஹென்றியை விசாரணைக்கு அழைக்கின்றேன்...
மிஸ்டர் ஹென்றி, அரசுதரப்பு வழக்கறிஞர் உங்களைப்பற்றி சொன்னதெல்லாம்
உண்மையா?
சிறிது மௌனம் நிலவியது...
பதில் சொல்லுங்க! மிஸ்டர் ஹென்றி...
ஆமா சார், உண்மைதான்! ஆனா, எனக்கே தெரியாம நடந்திருச்சு. இதுக்கு நான்
பொறுப்பில்ல சார்...
தப்பு செஞ்சத நீங்க ஒத்துக்குறீங்களா?
ஒத்துக்கிறேன் சார்! ஆனா, எனக்கே தெரியாம நடந்தது அதனால, என்ன தயவு
செஞ்சு மன்னிச்சு விட்டுருங்க சார்...
மிஸ்டர் ஹென்றி நீங்கள் போகலாம்...
இவ்வழக்கின் தீர்ப்பை பத்து நிமிடத்திற்கு பின் இந்நீதிமன்றம் வழங்கும்
என அறிவிக்கின்றேன்.
பத்து நிமிடத்திற்கு பின், நீதிபதி தீர்ப்பு வாசிக்கும் வேளையில்...
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது! மேலும், பொது இடங்களில்
புகை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். அதிலும் வாகனங்களை இயக்கும் போதும், சாலையில்
நடக்கும் போதும், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள் என ஒவ்வொரு இடத்திலும் புகைப்பிடித்தல்
பலருக்கு வழக்கமாகிவிட்டது. இவர்களது அலட்சியத்தால் பொதுமக்களும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
பொது இடத்தில் புகைப்பிடித்தல் கூடாது என்பதையும் மீறி பலர் புகை பிடிக்கின்றனர். அதில்
சிலர் புகைப்பிடித்தாலும் இறுதியில் அதனை முறையாக அணைக்காமல் வீசியெறிகின்றனர். இவர்களது
இத்தகைய அலட்சியத்தால் இதுபோன்ற தீ விபத்துக்கள் அரங்கேறுகின்றன. மேலும் விடை காண இயலாத
சில தீ விபத்துக்களுக்கு இதுபோன்ற செயலும் காரணமாக இருக்கலாம்.
இந்த வழக்கை பொறுத்தவரை, குற்றவாளி ஹென்றி தான் என்பது நிரூபனமாகியுள்ளது.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக அரைமணி நேரம் கூடுதலாக தனது பெட்டிக் கடையை திறந்து வைத்துள்ளார்,
தேனப்பன். அவரை இந்நீதிமன்றம் வன்மையாக கண்டித்து! பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றது.
மேலும் வாகனம் ஓட்டும்போது புகை பிடித்துக் கொண்டே சென்ற இளைஞர் குணா அவர்களுக்கும்
பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹென்றி அவர்கள்,
தானே தனது
குற்றத்தை ஓப்புக்கொண்டதால் அவருக்கு அபராதமாக இரண்டு லட்சமும் மற்றும் ஒரு மாதம் சிறை
தண்டனையும் வழங்கி இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. மேலும் அபராத தொகையை இழப்பீடு
தொகையாக மளிகை கடைக்காரர் கண்ணன் அவர்களிடம் ஒப்படைக்க இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
நீதிமன்றம் கலைந்த பின்பு,
முத்துராம் சார், அந்த ஏழு ஃபைல்ஸ எடுத்துட்டு வாங்க…!
ஆய்வாளர் ஆதிபகவனின், “தேடுதல் வேட்டை தொடரும்...”
தலைப்பு: புகையும் நெருப்பும்
எழுத்து: ஆ.கிருஷ்ணதாஸ்.
நாள்: 03/08/2020
இடம்:கோயம்புத்தூர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக