இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், டிசம்பர் 04, 2023

டாப்சிலிப்பும் பரம்பிக்குளமும்

பரம்பிக்குளம் அணைக்கட்டு

காடுகள் என்றால் அழகுதான். இயற்கை வழங்கியிருக்கும் அருட்பெருங்கொடைகளுள் காடுகளும் ஒன்று. அதிலும் பசுமை போர்த்தியிருக்கும் அக்காடுகளின் தோற்றம் நிச்சயம் நம் மனதை குளிர்வித்துச் செல்லும். இப்படியாகத்தான் ஒருநாள் நம் இந்திய தேசத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்திற்குச் சென்றோம். அந்நாள் தீபஒளித் திருநாளாக இருக்க, பட்டாசு பலகாரங்களை தவிர்த்து,  நண்பர்கள் ஐவர் பசுமையான தீபாவளி கொண்டாட, வனத்தை நோக்கி பயணித்தோம். பாலக்காட்டின் முடப்பளூர் நகரத்திலிருந்து ஆரம்பித்த இப்பயணம் நெம்மாரா, கொல்லங்கோடு, காம்பரச்சள்ளா, செமணாம்பதி வழியாக தமிழக எல்லைக்குள் நுழைந்து ஒடையகுளம் (உடையகுளம் மருவி ஒடையகுளம்) வழியாக சேத்துமடை செக்போஸ்ட் வந்துசேர்ந்தோம். நபர் ஒருவருக்கு முப்பதுரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி, நான்கு சக்கர வாகனத்திற்கு ஐம்பது ரூபாய் செலுத்தினோம். பிறகு காரில் அமர்ந்ததும் மெல்லிய இசையை பின்னணியில் ஒலிக்கவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். அதற்குள் ஒரு லாரி எங்கள் வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்தது. சுமையுடன் ஏற்றத்தில் ஏறுவதற்கு அந்த லாரியின் முனகல் சப்தம் நன்றாகவே கேட்டது. பிறகு நாங்களும் லாரியை பின்தொடர விரும்பாமல் கடந்துசென்றோம். எல்லாம் வனத்தை நோட்டமிட எத்தனிக்கும் ஆர்வம்தான். மாசில்லா காற்றுதான்  வனத்தின் முக்கிய மருந்து. அதனை நுகர்ந்துகொண்டே, நண்பர்களுடனான நக்கல் நைய்யாண்டியும், பயணத்தில் ஆங்காங்கே சாலையின் வளைவு நெளிவுகளும் இனிமையாக்க, இப்பயணத்தில் நாங்கள் கண்ட முதல் ஜீவன் ஓர் புள்ளிமான். துள்ளிக்குதித்து வந்த அப்புள்ளிமானை சிறிதுநேரம் நின்று கவனித்தோம்.  கணநேர கவனத்திற்குப் பிறகுதான் தெரிந்தது அருகில் நிறைய புள்ளிமான்கள் இருந்தன. பிறகு மயில்களும் குரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் குரங்குகளின் சேட்டைதான். கொடும் விசத்தன்மையுள்ள குளவிக்கூடு ஒன்றையும் கண்டோம். பிறகு தொடர்ந்த பயணத்தில் மனித கால்தடம் பதியாமல் பராமரிக்கப்பட்டு வரும் புல்வெளித்தடத்தைப் பார்த்தோம். அங்கேதான் தமிழக வனத்துறையால் யானைகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லும் வாகனங்களும் அலுவலகமும் இருந்தன. யானைகள் காப்பகத்திற்குச் செல்ல நபர் ஒன்றுக்கு 236ரூபாய் என்றார்கள். பிறகு செல்லலாம் என நினைத்து அருகிலிருந்த உணவகத்தில் காலை உணவருந்திவிட்டு ஒரு தேநீரை குடித்துவிட்டு அருகிலிருந்த சகோதரர் ஒருவரிடம் வனப்பகுதிகள் குறித்தும் பரம்பிக்குளம் அணைக்கட்டு குறித்தும் விசாரித்தோம். அச்சமயத்தில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி(யானை டாக்டர்) அவர்களின் மியூசியம் குறித்தும் விசாரித்தோம். அருகிலிருந்த அலுவலகத்தை அணுகச் சொன்னார். அங்கே அலுவலகத்தில் விசாரித்த போது டாக்டர் மியூசியத்தில் இருந்த புகைப்படங்கள் அனைத்தும் கொரோனாத் தொற்று காலத்தில் கரையான்கள் அரித்துவிட்டதாகவும் பிறகு அதை சரிசெய்து மீண்டும் காட்சிக்கு வைக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாகும் என தெரிவித்தனர். சிறிது ஏமாற்றம்தான், இருந்தபோதும் காட்சியகத்தில் இருந்த மற்றப் புகைப்படங்களை காணநேர்ந்தது. அவ்வனப்பகுதியில் உள்ள பூச்சியினங்கள் பறவைகள் விலங்குகள் என ஒவ்வொரு ஜீவராசிகளின் அறிவியல் பெயர்களையும் அவைகளின் பண்புகள் குறித்தும் விளக்கப்பட்டிருந்தன. பிறகு புலி சிறுத்தை மான்களின் காற்தடங்கள் அச்சுகளாக எடுத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாக இந்தியாவில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சரணாலயங்கள் குறித்த தகவல்கள் இருந்தன. காட்சியகத்தில் இருந்து வெளியே வந்ததும்  நினைவுக்காக சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அதற்குப் பின்பாக பரம்பிக்குளம் அணைக்கட்டை காண செல்லலாம் என எண்ணிக்கொண்டு கேரள சோதனைச் சாவடிக்கு நகர்ந்தோம். அங்கும் நபர் ஒன்றுக்கு நுழைவு கட்டணமாக 30ரூபாய் வசூலித்தார்கள பிறகு நான்கு சக்கர வாகனத்திற்கு 85ரூபாய் வசூலிக்கப்பட்டது. அவ்வலுவலகத்தின் அருகில் தண்ணீரை பாத்திபோல் கட்டிவைத்திருந்தனர். ஒருவேளை விலங்குகள் நீர் அருந்துவதற்கு அந்த பாத்தி உதவலாம். அங்கிருந்து  இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தால், பரம்பிக்குளம் அணைக்கட்டு செல்வதற்கான நுழைவுச்சீட்டு பெறவேண்டிய இடம் வந்தது. நபர் ஒன்றுக்கு 400 ரூபாய் எனவும்,  இந்த சுற்றுலாவில் ஏழு இடங்களை காண்பிப்பதாகவும் தெரிவித்தார்கள். பிறகு நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு பரம்பிக்குளம் பயணத்திற்காக காத்திருந்தோம். இதற்கிடையில் மதிய உணவை அருந்திவிட்டு ஓய்வெடுக்க தொடங்கினோம். சரியாக மதியம் 3:15 மணியளவில்  எங்களை அழைத்துச் செல்லும் வாகனம் வந்தது. கூடவே செல்லும் வழித்தடங்களில் பழங்குடியின மக்களின் குடிசைகளும் வாழ்விடங்களும் பார்த்துக்கொண்டே சென்றோம். தூணக்கடவு அணைக்கட்டு, கன்னிமாரா தேக்குமரம் (வயது 465க்கும் அதிகம்), பள்ளத்தாக்கு மற்றும் அணைக்கட்டு காட்சிமுனை, குடில்கள், இறுதியாக பரம்பிக்குளம் அணைக்கட்டு வந்துசேர்ந்தோம். கிட்டதட்ட மாலை 6:30 மணி ஆகியிருந்தது. அணைக்கட்டின் அழகும் மலைமுகடுகளின் எழில் தோற்றமும். மனதை இலகுவாக்கிக்கொண்டே இருந்தன. தண்ணீரையும் மலைப்பகுதிகளையும் மலைக்குள் மறையத்தொடங்கும் ஆதவனையும் ஒருசேர காணக் கிடைத்தது எங்கள் பாக்கியமே. நெடுநாட்களாக தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இந்த அணைக்கட்டை அருகில் பார்த்ததும் சொல்ல முடியாது இன்பம் மனதில் ஊற்றெடுத்தது. ஆம் டாப்சிலிப் பரம்பிக்குளத்திற்கு அருகிலேதான் நாங்கள் வசிக்கும் மானாம்பள்ளி வனச்சரகமும் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் பெயர் உருளிக்கல் பகுதியில் அமைந்துள்ள சுருளிமலை என்கிற குக்கிராமம். நாங்கள் வசிக்கும் மலைப்பகுதியில் கிராமத்திற்கு செல்லும் வழித்தடத்திலிருந்து பரம்பிக்குளம் பகுதியை காணலாம். சிறுவயது முதல் அருகாமையில் கண்டுகொண்டிருந்த அணையை மிகஅருகில் பார்த்ததும் நெடுநாள் கனவு நனவானது. நேரம் செல்லச்செல்ல இருள் கவியத் துவங்கியது. அவ்விடமிருந்து மீண்டும் மெல்ல மெல்ல வனத்திலிருந்து விலகத் துவங்கினோம். வரும்வழியில் ஆளுக்கொரு மரத்தினருகே நின்று எங்களை வேடிக்கை பார்த்தனர் யானைகள். நாங்கள் வனச்சரக  வண்டியில் அடைபட்டிருந்தோம். அள்ள அள்ள குறையாத நிகழ்வுகளுக்கு பிறகு சோதனைச் சாவடியிலிருந்து எங்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டே மீண்டும் நகர வாழ்க்கையை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தோம் ஓர் மரவட்டை பூச்சியைப் போலே. 


நன்றி..


ஆ.கிருஷ்ணதாஸ்


பயணித்த நாள் : 12/11/2023