இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூன் 28, 2021

ஆறுமணி ஆச்சு

ராம்மா... ராம்மா... மணியடி!
ராமச்சந்திரன்... மணியடி!
சீத்தா... சீத்தா... மணியடி!
சீக்கிரமா... மணியடி!... - என்று குழுவாக பாடிக்கொண்டிருந்தார்கள் ஏழுவயது நிரம்பிய ஐந்து தோழிகள். அவர்களின் வயதிற்கு சில மாதங்கள் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஒன்றுகூடி மகிழ்வதில் சிறிதளவும் வித்தியாசமில்லை. சுகந்தியின் வீட்டுவாசற்படியில் அமர்ந்து, பாடிக்கொண்டிருந்த அப்பாடல் முடிவடைந்ததும் மேடுபள்ளம் விளையாடத் தொடங்கினர்.

ஐவரில் ஒருத்தி, நால்வரின்முன் நின்று மேடு அல்லது பள்ளம் என தன் விருப்பம்போல் மாற்றி மாற்றிச் சொன்னாள். மீதி நால்வரோ மேடு எனும்பொழுது படிக்கட்டிலும், பள்ளம் எனும்பொழுது தரையிலும் குதித்துக் கொண்டிருந்தார்கள். தவறாக குதிப்பவர் தோத்தாங்கொள்ளி ஆக்கப்பட்டு, மற்ற நால்வரின்முன் நின்று சொல்லிக்கொண்டிருக்க, " ஏ பூவரசி வீட்டுக்கு வாடி"-என்று பூவரசியின் தாய் அழைத்தார். அவளும் "இதோ வரேன்மா"-என்றவாறே தோழிகளிடமிருந்து விடைபெற்றாள்.
பூவரசியைத் தொடர்ந்து மற்ற மூன்று தோழிகளும், வீட்டிலிருந்து அம்மாக்கள் வருவதற்குள் நாங்களும் கிளம்புகிறோமென்று சுகந்தியிடம் சொல்லிவிட்டு நகர, தன் தோழிகள் செல்வதை பார்த்தவாறே சுகந்தி வீட்டுவாசற்படியில் நின்றாள்.

சொகந்தீ...-பாட்டியின் குரல் உள்ளிருந்து வெளியே வர, வீட்டினுள்ளே சென்று ஒரு மூலையில் அமர்ந்தாள். சுகந்தியை பெற்றவர்களின் புகைப்படத்திற்கு முன்னால், பாட்டி விளக்கேற்றிக் கொண்டிருக்க "அழத்...தொடங்கினாள் சுகந்தி." -மாலைநேரம் ஆறு ஆகியிருப்பதை அந்த விளக்கு வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.


வியாழன், ஜூன் 03, 2021

உதவிக்கரம்

 

உதவிக்கரம்


வழக்கம்போல் அவனால் அன்று வேலைசெய்ய இயலவில்லை. பேருந்து பயணத்தினால் உண்டான களைப்பா, இல்லை இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்ததும் அவரச அவசரமாக இறங்கும் கூட்டத்தினூடே இவனும் கீழறங்கி, இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்து அலுவலகம் வந்தடைந்ததனால் உண்டான களைப்பா என்று தெரியவில்லை. அதையும் கடந்து தன் உடல்நலம் சீராகயில்லை என்பதை புரிந்து கொண்டான் மணிகண்டன். காலை ஒன்பது மணிக்கு துவங்கும் பணி மாலை எத்தனை மணிக்கு முடியும் என்பது அன்றைய வேலையை பொறுத்தது. சிலசமயம் முதலாளியின் மனநிலையை பொறுத்தது. இது அவனுக்கு மட்டுமல்ல, இவ்வாறு ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குமே.

எப்படியாவது ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, தினமும் அவசர அவசரமாக நடந்து சென்று பேருந்தில் ஏறி இருபது கிலோமீட்டருக்கான அவனது பயணம் தொடங்கும். இந்த அவசரத்திற்கு இருக்கையில் அமர இடம்கிடைத்தால், அதுவும் ஜன்னலோரம் கிடைத்தால் நன்றாக இருக்கும். கூடவே இருகாதுகளிலும் பாடல் ஒலி கேட்டுக்கொண்டே, வெளியே வேடிக்கை பார்த்து வந்தால் அவசரம் தானாகவே பொறுமையாகிவிடும். மணிகண்டனுக்கு இந்த வாய்ப்பு பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே கிடைத்தது. மற்ற நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சந்தைக்கு செல்பவர்கள்,பூ விற்கும் அக்கா, காய்கறி மூட்டைகள், மற்றும் பேருந்தின் கடைசி இருக்கைக்கு முன்பிலொரு சாய்ந்து நிற்கும் டயர் என்ற கூட்ட நெரிசலோடு செல்வதே கதியாய் இருந்தது.

சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டை கேட்டு வாங்குங்கள்! என்று நடத்துனரின் குரல் அடிக்கடி கேட்கும். இரண்டு ரூபாய் கொடுத்தால் மீதி ஐந்து ரூபாய் தருகிறேன் என்றும், படிக்கட்டில் நிற்காதீர்கள்! மேலே வாருங்கள் என்றும் அவர் சொல்லும்போது, இவனது உதடுகளும் அதையே முணுமுணுத்தன. தினமும் கேட்டுக் கொண்டிருப்பதால் அவனுக்கு அது பழகிவிட்டது. அதோடு அச்சச்சோ நேரமாச்சே! என்று அடிக்கடி மனது படபடவென அடித்துக் கொண்டிருக்கும். போதாததற்கு ஓட்டுனரும் குறைந்த வேகத்தில் இப்படி உருட்டுகிறாரே என்று, அவரை அவனது மனம் திட்டிக் கொண்டிருக்கும். அவன் மட்டுமா என்ன...? ஆனால் சுமை அதிகமானால் வேகம் குறையும் என்ற அறிவியலின் சமன்பாடு உணரமுடியாத தருணமாகும் வேளையது.

அன்றும் அதேசூழலில் தான் பேருந்து நிறுத்தம் வந்து இறங்கியதும், சாலையை கடந்து வேகவேகமாக நடந்து சென்றான். அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அவனைப் போலவே பலரும் அங்கு நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் இவனை கடந்து சென்றார்கள். சிலர் எதிரே வந்தார்கள். தன் வயதையொத்த பெண்களை பார்த்தால் மட்டும் அவர்களை அடிக்கடி பார்ப்பான். எல்லோரையும் அப்படி பார்க்க வேண்டிய அவசியமில்லை. வயது சொல்லும் தத்துவம் அதுதானே.

அவர்களையெல்லாம் கடந்து பிறகு ஒரு தண்டவாளத்தை தாண்டி செல்ல வேண்டும். அப்பொழுது தண்டவாளத்தை நெருங்குகையில் கிழக்கு மேற்காக அவனது தலையசைந்து இரயில் வருகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளும். அத்துடன் சூரியனை ஒருமுறையேனும் பார்த்துவிட்டு நகர்வான். ஒருவேளை அந்த தண்டவாளத்தில் கேட் போடப்பட்டு இருந்தால், அவ்வளவு தான் இவனது இரத்தம் கொதிக்கத் துவங்கிவிடும். ஒருகணம் யோசித்தால் அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். நாம்தான் நேரமாக வரவேண்டுமென அவனயே திட்டிக் கொள்வான். ஆனால் வீட்டில் உணவு சமைக்கப்பட்டு, அதனை காலைக்கும், மதியத்திற்கும் கட்டிக் கொண்டு வரவேண்டிய சூழலில் சிறுதாமதம். இல்லையென்றால் உணவு விடுதிகளில் அருந்தவேண்டும். சாமானியன் வாழ்வில் சமைத்து சாப்பிடுவதே செலவு குறைவென்பது காலங்காலமாக சொல்லப்பட்டுவரும் ஒப்பீடு. ஆகையால் மிச்சப்படுத்தப்படும் பணம் பேருந்துகட்டணத்திற்கு கூட உதவலாம் என்று மணிகண்டனும் நினைத்துக்கொண்டான்.

அவன் தண்டவாளத்தை கடந்து நேராக சென்ற சிலதூரத்தில், எப்போதும் வலதுபுறமாக வளையும் அதே ஃபவுண்டரி சாலைக்குள் நுழைந்தான். அந்த இடம் வரும்போதெல்லாம் கண்களும் தானாக வலதுபுறமாக வளையும். அப்போது ஏதாவதொரு இருசக்கர வாகனத்தின் இண்டிகேட்டர் சப்தமும் கேட்கும். அவன் தொடர்ந்து ஃபவுண்டரி சாலையில் நடந்துகொண்டிருந்தபொழுது, ஒவ்வொரு ஃபவுண்டரிகளின் முன்பு சுத்தியலால் டமார்…டமாரென்று காயவைக்கப்பட்டிருந்த காஸ்டிங் பாகங்களை, அச்சிலிருந்து எடுக்க தட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் கண்கள் பார்த்துக் கொண்டே சென்றது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் அவ்விடம் காடுபோல் காட்சியளிக்கும். அந்த சாலையின் மூலையில் நின்றுகொண்டிருந்த ஒரு தெருவிளக்கு எப்போதும்போல் அன்றும் அவனை வரவேற்றது. தெருவிளக்கை கண்டநொடி அவனது கண்களும் கால்களும் இடதுபுறமாக மண்சாலைக்குள் திரும்பின. அதில் சற்றுதூரம் நடக்கையில், எதிரே தண்ணீர் தொட்டி பூட்டப்பட்ட ஒற்றை மாட்டுவண்டியில் ஒரு முதியவர் வந்தார். அவரைக் கண்டதும் இவனுக்கொரு சிரிப்பு. கைகளை உயர்த்தி ஐயா என்றான். பதிலுக்கு அவரும் வணக்கஞ்சாமி! என்று சிரித்துவிட்டு நகர்ந்தார். இவனும் நகர்ந்தான். பிறகு ஹோய்! ஹோய்! என்கிற குரல் மட்டுமே அங்கு கேட்டது.

அலுவலகத்தை நெருங்கும் சமயம் வந்தது. அங்கிருந்த குழியைத் தாண்டி இடதுபுறமாக திரும்பி நான்கு எட்டுவைத்ததும் வலதுபுறமாக திரும்பினான். திரும்பவும் நான்கு எட்டுவைத்து வலதுபுறமாக திரும்பி அலுவலகம் வந்தடைந்தான். ஒரு ஐந்து நிமிட தாமதமும் அதற்கான காரணமும் அவனுடன் வந்தது. ஆனால் அலுவலகத்தில் யாரும் அதைப்பற்றி கேட்கவில்லை. ஆகையால் காரணம் காணாமல் போனது. தேடவேண்டிய அவசியமும் அங்கு இல்லை. காலை வேலைதொடங்கியது முதல் நன்றாக பணி செய்துகொண்டிருந்தான். ஆனால் அது கோடைகாலம் என்பதனால் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. ஏனோ உடல்நிலையில் ஒருவித அசௌகரியம் உண்டானது. மதியவேளை கடந்து மாலை ஐந்துமணி அளவில் அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சரியாக வேலைசெய்ய இயலவில்லை, அந்நிலையை ஒரு மூன்று மணிநேரம் தான் அவனால் தாக்குபிடிக்க முடிந்தது. உள்காய்ச்சல் மற்றும் ஜலதோஷம்போல இவனுக்கு தோன்றிட, நிற்பதற்கு கூட சக்தியில்லாமல் திணறிக்கொண்டிருந்தான். அந்த அலுவலகத்தில் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தகர சீட்டுகள் மற்றும் மேற்பரப்பில் வேயப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டுகள், அடுத்தடுத்து நிற்கும் லேத் இயந்திரங்கள் போன்றவற்றால் ஏற்படுகின்ற வெப்பநிலை அதிகரிப்பு, இவனது உடலை மேலும் கொதிக்க வைத்தது.

முதலாளியிடம், சற்று முன்னதாகவே வீட்டிற்குச் செல்ல அனுமதி பெற்றுவிட்டு இரவு எட்டுமணி அளவில் அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். ஆனால் எட்டுவைக்கும் ஒவ்வொரு அடியும் கடினமாக இருந்தது. போதாததற்கு செல்லும்வழியில் கும்மிருட்டாக இருந்தது. ஆம்! தெருவிளக்கை நெருங்கும்வரை அந்த மண்பாதை இருட்டாகத்தான் இருக்கும். செல்போனில் டார்ச் அடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான். பிறகு தெருவிளக்கை கண்டதும் வலதுபுறமாக திரும்பி ஃபவுண்டரி சாலைக்குள் நுழைந்தான். தெருவிளக்கின் வெளிச்சம் நீண்ட தூரத்திற்கு வர இயலாத காரணத்தினால், மீண்டும் டார்ச் அடித்துக்கொண்டு நடந்தான். ஆனால் தொடர்ந்து அவனால் நடக்க இயலவில்லை. உடலின் அசௌகரியம் அவனை நிலைகுலையச் செய்தது. இது வேலைக்கு ஆகாது என்றெண்ணி, யாரிடமாவது லிஃப்ட் கேட்டு சென்றுவிடலாம் என கரங்களை நீட்டினான். அப்போது அடுத்தடுத்து வந்த மூன்று இருசக்கர வாகனங்களும் நிற்காமல்தான் சென்றது. சரி இனி வேறுவழியில்லை நடந்தேதான் போகவேண்டும் என்று பற்களை கடித்துக்கொண்டு எட்டுவைத்தான். ஆபத்தென்று வந்தாலே கடவுளை அழைத்துதானே ஆகவேண்டும் என்பதுபோல் அவனும் கடவுளை வேண்டிக்கொண்டு நடக்கலாயிற்று. அந்த சமயத்தில்தான் இவனைக் கடந்து ஒரு இருசக்கர வாகனம் சிறிது தூரத்தில் சாலையின் இடதுஓரமாக நின்றது. வாகனத்திலிருந்து கீழிறங்கி வந்தவர், அங்கிருந்த மரத்தை நோக்கி ஓடினார். அவ்வளவு அவசரம்போல் அவருக்கு, உடனே சிறுநீர் கழிக்கத் தொடங்கினார்.

உடனே மணிகண்டன் அவரது வாகனத்தின் அருகில் வந்து நின்றான். சிறுநீர் கழித்து முடித்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட அந்த நபர், தன் வாகனத்தை நோக்கி திரும்பினார். அவரிடம் தனக்கு உடம்பு சரியில்லை என்றும் ஆதலால் தன்னை பேருந்து நிறுத்தம்வரை அழைத்துக் கொண்டு செல்லும்படி மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவரோ தான் அந்தவழியாக செல்லவில்லை. வேண்டுமானால், இந்த ஃபவுண்டரி சாலையின் முடிவில் உங்களை இறக்கி விடுகிறேன் என்று சொல்லி அழைத்துச் சென்றார். சரி! வந்தவரை லாபம் என்றெண்ணி, நன்றி கூறிவிட்டு அவருடன் பயணிக்கத் தொடங்கினான். ஃபவுண்டரி சாலையின் முடிவில் வந்ததும் அந்த நபர் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை. தானே பேருந்துநிறுத்தம் வரை வந்து இறக்கிவிடுவதாக சொல்லி அவனை அழைத்துச் சென்றார். அந்நேரத்தில் கடவுளுக்கும் அவருக்கும் மனதில் நன்றி சொல்லிக் கொண்டான். அண்ணா உங்கள் பெயர் என்ன? என்று இவன் கேட்க, என் பேரு செந்தில் என்று அவர் பதிலளித்தார். நீங்க எந்த ஏரியா? என பேச்சை தொடர்ந்தான். நான் சேரன்மாநகர் தம்பி என்று பதிலளித்த அவரும் அவனிடம் சில கேள்விகளை கேட்டார். லிப்ஃட் ஏறிச் செல்லும்போது நிகழும் வழக்கமான உரையாடல் நிகழ்வு அது. இப்படி நீண்ட உரையாடலுக்குப் பின், அவர் மதுவருந்தி இருக்கிறார் என்பதை இவன் தெரிந்துகொண்டான். இவனுக்கு ஜலதோஷம் பிடித்திருந்த காரணத்தினால் ஆரம்பத்தில் அது தெரியவில்லை. பிறகு அவருடைய பேச்சின் மூலம் கண்டறிந்தான். ஒரு வழியாக பேருந்து நிறுத்தம் வந்தடைந்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டான் மணிகண்டன். ரொம்ப நன்றி என இவன் சொல்லும்போது, அவரோ தம்பி கீழே இறங்க வேண்டாம். உடம்புசரியில்லை என்று வேறு சொல்கிறீர்கள், நானே உங்களை வீட்டில் இறக்கி விட்டு வருகிறேன் என்றார். மேலும் நீங்கள் எங்கே செல்லவேண்டும் என அவர் கேட்டபொழுது, இவரிடம் இடத்தின் பெயரை சொல்லலாமா இல்லை வேண்டாமா? குடித்துவிட்டு வேறு வந்திருக்கிறாரே? என சிறிதுநேரம் யோசித்த அவன், புளியகுளம் என்று, செல்ல வேண்டிய இடத்தின் பெயருக்கு பதிலாக பொய் சொன்னான்.ஆனால் அவன் செல்ல வேண்டிய இடம் சுந்தராபுரம். இதுவரை நன்றியுணர்வுடன் இருந்த அவனுக்கு, அவரின்மேல் கொஞ்சம் பயம் தொற்றிக்கொண்டது. மேலும் பிரதானசாலை வழியில் செல்லாமல், வேறோதோ மாற்று வழிகளில் செல்கிறாரே! என மனம் படபடவென அடித்துக்கொண்டிருக்க, இப்போது அவர் கேட்ட கேள்விகளுக்கு இவன் உளறத் தொடங்கினான். தொடர்ந்த இந்த பயணத்தில் பாதிதூரம் சென்றதும் அந்த நபர், உங்கள் வீட்டிற்கு அழைத்து நாம் இருவரும் ஒன்றாக வருவதை அவர்களிடம் கூறுங்கள் தம்பி. நானே உங்களை பத்திரமாக அங்கு இறக்கி விடுகிறேன். உங்களுக்கு கவலை வேண்டாம் என்று சொல்ல, இவனுக்கோ முகம் தூக்கிவாரியிட்டதுபோல் ஆனது. இப்படிப்பட்ட மனிதரையா நாம் சந்தேகித்தோம். அதிலும் செல்லும் இடத்தின் பெயரையும் மாற்றி பொய் சொல்லிவிட்டோமே, இது அவருக்குத் தெரிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார். நாளை வேறு யாருக்கேனும் உதவுவதற்கு கூட யோசிக்க வைத்துவிடுமே என்றெண்ணி வேதனை கொண்டான். என்னாயிற்று தம்பி? எதுவும் பேசாமலேயே வருகிறீர்கள் என்று அவர் கேட்க, ஒன்றும் இல்லை அண்ணா! நீங்கள் என்னை புளியகுளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டாலே போதும். பிறகு எனது நண்பனை அழைத்தால் அவனே வந்து, வீட்டிற்கு அழைத்துச் செல்வான். உங்களுக்கு எதற்கு வீண்சிரமம். ஏற்கனவே இவ்வளவு தூரம் பயணித்து வந்துவிட்டீர்கள் என்றான். இதில் சிரமம் ஒன்றும் இல்லை தம்பி! உங்கள் வீட்டிற்கே செல்லலாம் என அவர் சொல்லுகையில், கூறியவொரு பொய்யால் இவன் வேதனைக்குள்ளானான்.

நேரமும் ஆகிவிட்டது அண்ணா, தங்கள் இல்லத்திலும் உங்களை தேடுவார்கள் அல்லவா! ஆதலால் எனக்காக இவ்வளவு தூரம் உதவி செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி! உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுங்கள், வீட்டிற்கு சென்றடைந்ததும் நானே நிச்சயம் உங்களுக்கு அழைத்துச் சொல்கிறேன் என்று சமாளித்தான். அவரும் தனது அலைபேசி எண்ணை வழங்கி, பத்திரமாக வீட்டிற்கு செல்லும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் சென்றுவிட்டதை உறுதிபடுத்திக்கொண்டு, பின் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்றில் ஏறி உக்கடம் நகர பேருந்துநிலையத்திற்கு கிளம்பிச் சென்றான். பிறகு உக்கடத்தில் இருந்து சுந்தராபுரத்திற்கு அரசுப் பேருந்தில் பயணித்தான். அந்த பயணத்தில் செந்திலின் ஞாபகமே நிறைந்திருந்தது. அந்த மனிதர் குடிக்கத்தான் செய்திருந்தார், ஆனால் நல்ல குடிமகன் என நினைத்துக் கொண்டான். பிறகு தான் இறங்கவேண்டிய பேருந்துநிறுத்தம் வந்ததும், கீழிறங்கி வீட்டைநோக்கி நடந்தான். வழியிலிருந்த மெடிக்கல் கடையில் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு,வீட்டை வந்தடைந்ததும் அவனுக்கு பெரும் நிம்மதி உண்டானது. உடனே செந்திலிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பத்திரமாக தான் வீடு வந்துசேர்ந்ததாக சொல்லி தனது நன்றியையும் தெரிவித்தான்.

ஆறுவருட காலத்திற்குப் பின், ஒருநாள் அலுவலகத்திற்குச் செல்லும் அதே சாலையில் மணிகண்டன் தனது சொந்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். இப்போதெல்லாம் அந்த பேருந்து பயணங்களை தான் இழந்துவிட்டதாக எண்ணி ஆனந்தக்கண்ணீர் கொண்டான். அதையும் கடந்து அவன் சென்று கொண்டிருக்கையில், யாரோ, “மணி! நில்லு மணி! இந்தா... “என்று அழைக்க, அக்குரல் கேட்டு அவன் தனது வாகனத்தை நிறுத்தி, திரும்பி பார்த்தான். அங்கே ஒரு தாய், தனது குழந்தையை சோறூட்டுவதற்காக அழைத்துக் கொண்டிருந்தாள். அக்குழந்தைக்கு அருகிலிருந்த சகோதரனோ, "மணி! மணி! மாவாட்டி... மணிக்கு ரெண்டு பொண்டாட்டி..." என பாடிக்கொண்டிருந்தான். மணிகண்டனுக்கு அக்காட்சியை கண்டதும் சிரிப்பு மலரத் துவங்கியது. ஆம்! ஊரிலுள்ள பல மணிகண்டன்களை யாவரும் முழுப்பெயர் சொல்லி அழைப்பதில்லையே. கண்டனை விட்டுவிட்டு மணி என்றே காலங்காலமாக அழைத்து வருகிறார்கள். இவன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தான். அலுவலக பேருந்து நிறுத்தத்திலிருந்து இடதுபுறமாக வளைந்து சிறிது தூரத்தில் பழைய நினைவுகளோடு, தண்டவாளத்தை அவன் கடந்ததும்,ஒரு முதியவர் லிஃப்டிற்காக உதவிக்கரம் நீட்டினார்.

இப்பொழுதெல்லாம் யார் உதவிக்கரம் நீட்டினாலும், மணிகண்டனுக்கு செந்திலின் ஞாபகமே ஒவ்வொருமுறையும் வந்துகொண்டிருந்தது. அந்த குடிமகன் இவன் மனதில் நன்றாக பதிந்துவிட்டார். பின் நினைவு திரும்பியவனாய், அம்முதியவரை தன் வாகனத்தில் அமரச் செய்து அங்கிருந்து புறப்பட்டான் மணிகண்டன்.

 

நன்றி.

எழுத்து: ஆ.கிருஷ்ணதாஸ்

இடம்: கோவை

நாள்: 20/05/2021.