காற்றிலாடிக்கொண்டிருந்த உடைகள்
முத்தமிட்ட மழைத்துளிகளைக்
காண்பிக்க
வெள்ளை பெட்டிக்குள்
தொப்பென்று விழுந்தன கிளிப்புகள்
தங்கள் ஆட்டங்களை
மின்னி மின்னி
கவர்ந்திழுக்கின்றன
மின்விளக்குகள்
அவசர ஓட்டத்தில்
ஓரேயொருமுறை மட்டும்
அதனைப் பார்த்து நகர்கிறாள்
ஏஞ்சலின்
நெடுஞ்சாலை போக்குவரத்தின்
மாலைவேளை குளிருக்கு
மத்தியில்,
ஆவி பறக்க
சுண்டியிழுக்கிறது
பிரியாணிக் கடை
தேநீருக்கு இன்று ஓய்வு
வேலைமுடிந்ததும்
உணவுப்பையை தூக்கிக்
கிளம்பும் ஆல்வினுக்கு இன்று
தொண்ணூற்று நான்காவது
வேலைநாள்
அவ்வப்பொழுது நேரவிருக்கும்
நிகழ்வுகளை முன்பே
அட்டவணைப்படுத்திக்
காத்துக்கொண்டிருந்தது
ஒரு மாலை நேரம்.
- ஆ.கிருஷ்ணதாஸ்.
(ஆனந்த விகடன் வார இதழில் சொல்வனம் பகுதியில் 26-06-2024 அன்று இப்படைப்பு வெளிவந்துள்ளது.)
