பாலக்காடு மாவட்டத்தின் கொல்லங்கோடு நகரத்திற்கு அருகில், குன்னக்காட்டில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி நீர்வீழ்ச்சி, இயற்கை ஆர்வலர்களுக்கு ஓர் பொக்கிஷம். பிரதான சாலையிருந்து இப்பகுதிக்கான சாலையில் நாம் நுழையும்போதே இயற்கையின் மடியில் இளைப்பாற துவங்குவோம். வயல்வெளிகளின் பசுமையும், பனைமரங்களின் அணிவகுப்பும் நம்மை கொள்ளைகொள்ளும். ஆங்காங்கே சிற்றுண்டிக்காகவும், உணவுக்காகவும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செல்லும் வழித்தடத்தில் மெதுவாக வாகனத்தை இயக்கிச் செல்வது நலம். ஏனென்றால் குறுகலான பாதை என்பதால், எதிரே வரும் வாகனங்களுக்கு அவ்வப்பொழுது வழிவிட நேரிடும். கிட்டத்தட்ட நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகில் வந்ததும் நிறைய பார்க்கிங் வசதி உள்ளது. 50ரூபாய் காருக்கு வசூலிக்கிறார்கள். நுழைவிடத்தில் கழிப்பிட வசதியும் உண்டு. நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ கண்டுகளிக்க நல்லதொரு இயற்கை ஸ்தலம். நெல்லியாம்பதி மலையின் உயரத்தை இங்கிருந்து காணலாம். வெள்ளிமாலையாக விழும் நீர்வீழ்ச்சியின் அழகு, காண்பவருக்கு விருந்துதான். ஆனால் நீர்வீழ்ச்சியில் குளிக்க விரும்பினால் அதிக கவனம் தேவை. மிதமான மழைக்காலங்களில் இங்கு பயணம் செய்து குளித்தல் நலம். அதிக மழைக்காலங்களில் இங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
வேண்டுகோள்: குப்பைகளை வனத்தில் எறியும் முன், வனம் நமது சொத்து என்பதை நினைவில் கொண்டு. சுற்றுலா பயணிகள் குப்பைகளை ஏதேனுமொரு பையில் சேகரித்துக்கொண்டு, செல்லும்வழியிலுள்ள ஏதேனுமொரு குப்பைத்தொட்டியில் போடவும். நன்றி.
இடம்: சீதற்குன்ட் நீர்வீழ்ச்சி, குன்னக்காடு. பாலக்காடு மாவட்டம்
