எரியும் பனிக்காடு – ஒரு வரலாற்று ஆவணம்.
வறுமை ஒருபுறம், இயலாமை மறுபுறம் என அறத்தின் வழியே வாழ்ந்த நமது முன்னோர்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நூல்களில் எரியும் பனிக்காடு ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.
1930-களில் தென் தமிழகம், பழனி, ஈரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பிழைப்பிற்காக புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையை, திருநெல்வேலியைச் சேர்ந்த கருப்பன்–வள்ளி என்ற கதாப்பாத்திரங்களின் வழியாக வால்பாறை தேயிலைத் தோட்டங்களுக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது இந்நாவல். கூலித் தொழிலாளர்களின் வறுமையையும் இயலாமையையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கங்காணிகள், ஆசை வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அதுவரை தெய்வமாகத் தோன்றியவர்கள், பின்னர் கொடூரர்களாக மாறுகின்றனர்.
தேயிலைத் தோட்டங்களின் அமைப்பு, பல்வேறு எஸ்டேட்டுகள், அடர்ந்த காடுகள், தேயிலைப் பராமரிப்பு முறைகள், கொழுந்து கிள்ளுதல் போன்ற பணிகள் எனப் பல தகவல்களை ஆசிரியர் நுட்பமாகப் பதிவு செய்கிறார். அதோடு, பாதுகாப்பற்ற சூழலில் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் தொழிலாளர்கள், குடியிருப்புகளில் ஒரு வீட்டை இரண்டாகவும் மூன்றாகவும் பிரித்து வாழும் அவலம்,மளிகைப் பொருட்களுக்குக் கடன், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் கூலி, அதிலிருந்தே கழிக்கப்படும் கடன்கள், அதிகம் சம்பாதித்தால்தான் சொந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு, இல்லையெனில் கடன் தீரும் வரை முடிவில்லா உழைப்பு, தப்பிச் செல்ல முயன்றால் அடியாட்களின் தாக்குதல் என அதிகாரச் சுரண்டலின் உச்சத்தை நாவல் வெளிப்படுத்துகிறது.
பிரித்தானிய ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, உயரதிகாரிகளின் கொச்சை வார்த்தைகள் தரும் வலிகள் அதனை எதிர்க்கவியலாதொரு நிலை, உயரதிகாரிகளின் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பெண்கள், கள்ளக் கணக்குகளால் ஏமாற்றப்படும் கூலிகள், தரமற்ற மருத்துவ வசதி, அட்டைக்கடி, கடுங்குளிர், காட்டு விலங்குகளின் அச்சம் என எண்ணற்ற துயரங்களைத் தாங்கிய அப்பாவி மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் உயிரோட்டமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
தேயிலைத் தோட்டங்களில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றிய பி. ஹெச். டேனியல், அங்கு நேரில் கண்ட கொடுமைகளை உலகறியச் செய்தவர். மலைப்பகுதிகளில் மறைக்கப்பட்டிருந்த உண்மைகளை சமவெளிக்கு கொண்டு வந்த அவரது முயற்சி மிக முக்கியமான வரலாற்றுப் பங்களிப்பாகும். பசுமையாகக் காட்சியளிக்கும் தேயிலை இலைகளின் பின்னால் எண்ணற்ற தொழிலாளர்களின் இரத்தமும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை நினைவூட்டும் வலிமையான சான்றாக இந்நாவல் விளங்குகிறது.
ஆங்கிலத்தில் Red Tea என்ற பெயரில் திரு. பி. ஹெச். டேனியல் அவர்கள் எழுதிய இந்நூலை, அதன் சாராம்சம் சிதையாமல் மிகச் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் திரு. இரா. முருகவேள் அவர்கள். இருவருக்கும் மிகுந்த நன்றி.
சீர் வாசகர் வட்டமும் ஐம்பொழில் பதிப்பகமும் இணைந்து இந்நூலை தரமான முறையில் வெளியிட்டுள்ளனர்.
அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான வரலாற்று நாவல்.
விலை: ரூ. 200
நாவலை வாசித்து முடித்ததும் தோன்றிய முக்கியமான விசயமொன்று என்னவென்றால், நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்பதுதான். முன்னோர்களின் தியாகத்தில் நாம் சொகுசாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதிலும் கல்வி நம்மை ஏதோவொரு விதத்தில் பாதுகாக்கிறது. கல்விதான் நமக்கான செல்வமென முன்னோர்கள் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எந்த போராட்டத்திற்கும் கல்வியே ஏதோனுமொரு விதத்தில் மருந்தாகிறது. இந்த எளியவன் பார்வை இவ்வளவே. நன்றி 🙏
ஆ.கிருஷ்ணதாஸ்.
கோவை.
அட்டைப்படம் மற்றும் நூல் வெளியீடு:
சீர் வாசகர் வட்டம் மற்றும் ஐம்பொழில் பதிப்பகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக