காட்டுவழிப் பாதை:
அந்த மலைப்பிரதேசம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காண்பதற்கு மிகவும் திகிலாக இருக்கும். அங்குள்ள கிராமங்களில் ஒன்றான ஏலக்காடு என்கிற கிராமத்தில் அறுபத்திஆறு குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன. அதுமட்டுமின்றி அந்த வனப்பகுதிக்கு சொந்தக்காரர்களாக பல்வேறு பூச்சியினங்களும், பலவித பறவைகளும், பலதரப்பட்ட விலங்குகளும் இருந்து வந்தன. அவ்விடத்திற்கு மனிதர்களே விருந்தாளிகளாகத்தான் காணப்பட்டனர். ஏனென்றால், முந்தைய காலத்தில் பெரும்பாலும் அம்மலைப்பகுதிக்கு வந்தவர்கள் எல்லாம் பிழைப்பைத் தேடி வந்தவர்களே. ஆதலால் தாங்கள் உழைத்து ஒரு நிலைக்கு வரும்வரை அங்குள்ள பணப்பயிர்களை தனியார் நிறுவனம் ஒன்றிற்காக விவசாயம் செய்துகொடுத்து பிழைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த கிராமத்தில் முருகேசன் என்பவர் ஏலக்காய் தோட்டத் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். அவருடைய மனைவியின் பெயர் சீதா மற்றும் அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருந்தனர். முருகேசனின் தந்தை பெருமாள் மற்றும் தாயார் சாந்தி ஆவர். முருகேசனின் பெற்றோர்கள் உண்மைக்கும் உழைப்பிற்கும் பெயர் பெற்றவர்கள், அவர்களின் வழியிலேயே இவரது பயணமும் தொடர்ந்தது.
வேலையாட்களுக்காக வரிசையாக கட்டப்பட்டிருந்த கம்பெனி வீட்டிலேயே முருகேசனும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். இயற்கையோடு இணைந்திருக்கும் அந்த வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் போராட்டமாகவே இருந்தது. ஏனென்றால், வேலைசெய்யும் இடங்களில் வேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது, எந்நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்ற நினைவுடனும் வேலைசெய்ய வேண்டியிருந்தது. அங்கே ஆபத்திற்கு பல விசயங்கள் இருந்தன. குறிப்பாக இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள், உண்ணிகள், சீறிப்பாயும் சிறுத்தைகள், துரத்தி விரட்டும் யானைகள், முட்டி வீசும் காட்டெருமைகள், பட்டென்று முத்தமிடும் பாம்புகள், தோலை கொப்பளிக்கச் செய்யும் கம்பளிப் பூச்சிகள், உடல் அரிப்பை ஏற்படுத்தும் ஆனைமரத்தி மற்றும் பூனைமரத்தி போன்ற விஷச் செடிகள் என பட்டியலிட்டு சொல்லும் அளவிற்கு ஆபத்துகள் ஏராளம். இத்தனை ஆபத்துகளுக்கு மத்தியில் போராடும் மக்களுடனே முருகேசனும் அவரது குடும்பத்தினரும் வாழ வேண்டியிருந்தது.
ஒருமுறை இரவுவேளையில் கனமழை பெய்துகொண்டிருந்த அந்த அடர்ந்த காட்டிற்குள், மின்னல் வெட்ட! வெட்ட! வயது முதிர்ந்த பாலிமரம் ஒன்று படாரென்று முறிந்து விழுந்தது. மறுபுறம் கம்பெனிவீடுகள் அமைக்கப்பட்டிருந்த இடத்தினருகே இடிதாக்கியதால் சுருளிமரம் ஒன்று இடிந்துவிழ, அது முருகேசன் வீட்டு மேற்கூரையின் மீது விழுந்தது. மரம் விழுந்ததில் சிமெண்டு ஓடுகள் உடைந்து மழைத்துளி வீட்டினுள்ளே எட்டிப் பார்க்க, உறங்கிக் கொண்டிருந்த அனைவரையும் விழிக்க வைத்தது அந்த நிகழ்வு. மழைத்துளி சொட்ட! சொட்ட! காலை விடியும் வரை பெரியவர்களின் கண்கள் விழித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் மட்டுமே உறங்கினர்.
காலை விடிந்ததும், மேற்கூரையில் விழுந்திருந்த மரத்தை அறுத்தெடுத்து பின் உடைந்த ஓட்டுத் துண்டுகளை கவனமாக எடுக்க முயன்றனர். அதேசமயம், சேதமடைந்த ஓடுகளுக்கு பதிலாக மைக்காவும், விளம்பர பலகைகளுமே தற்காலிக தீர்வுகளாயின. "அப்பாடா ஒருவழியா ஓட்டைய அடைச்சாச்சு! இனி மழைத் தண்ணி ஒழுகாது..." என்கிற வார்த்தைகள் அவர்களுக்கு நிம்மதியை தந்தது.
பின்பு குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த வேளையில், "பாத்து! பத்திரமா போயிட்டு வாங்க சாமி..." என காலை உணவையும், மதிய உணவையும் கூடையில் எடுத்துக் கொண்டு, முருகேசனும் சீதாவும் காட்டுவழிப் பாதையில் புறப்படத் தயாராகினர். பூச்சிகள் பாதங்களை அண்டாமலிருக்க, அவர்களது பாதங்களில் மூக்குப் பொடியையும், டெட்டால் துளிகளையும் தடவிக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டனர். பின் பள்ளிக்குச் செல்ல தயாராகயிருந்த இரு குழந்தைகளையும் தாத்தா அழைத்துச் செல்ல, கடைசிக் குழந்தை பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
அச்சிறுவர்கள் பள்ளிக்கு தினமும் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டியிருந்தது. இதுபோன்ற நீண்ட நடைபயணம் அம்மலைப்பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிகழும் ஒன்றாக தான் இருந்தது. அதுமட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு, அந்த காட்டுவழிப் பயணம் சில சமயங்களில் அச்சத்தை தருவதாக தான் இருந்து வந்தது.
தலையில் பூச்சிக்கொல்லி மருந்து கேன்களை சுமந்துகொண்டு பெண்கள் அனைவரும் காட்டினுள்ளே வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தனர். அப்போது கால் இடறாமலிருக்க சிலர் காலணிகளை கழற்றிக்கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்கையில் எதிர்பாராவிதமாக, குரங்குபலா மரத்தின் முட்கள் கொத்தாக சீதாவின் பாதங்களில் தைத்தது. தலையிலிருந்த மருந்துகேனை சீதாவால் உடனே கீழேயிறக்க இயலவில்லை. ஏனென்றால், அம்மருந்துகேனின் எடை மிகவும் கனமாயிருந்தது. அனைவரின் தலையிலும் அதே எடைகொண்ட மருந்துகேன்கள் இருந்தமையால் யாராலும் அச்சமயம் உதவ இயலவில்லை. அதனால் சீதா குத்திய முட்களுடனும், வலியுடனுமே சென்றடைய வேண்டிய இடத்திற்கு நடக்க வேண்டியிருந்தது. பிழைப்பிற்காக இது போன்ற வலிகளை அம்மலைவாழ் மக்களும் காலங்காலமாக சுமந்து கொண்டிருந்தனர்.
மறுபுறம் கிடைக்கப்பெற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பான் இயந்திரங்களில் நிரப்பிக் கொண்டு, ஏலக்காய் செடிகளுக்கு தெளிக்கச் சென்றனர் ஆண்கள். அவ்வாறு செல்கையில், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் இருக்க வேண்டும். இல்லையென்றால், கால் அரிப்பை ஏற்படுத்தும் ஆனை மரத்தி மற்றும் பூனை மரத்தி போன்ற விஷச் செடிகளை உரச நேரிடலாம். ஆனால், அன்று வேலையின் கவனத்தில் மும்முரமாக இருந்த முருகேசன் அவற்றை கவனிக்காமல் உரசிவிட, கால்களை சொறிந்துகொண்டே பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கும் நிலை ஏற்பட்டது.
மழைபெய்து கொண்டிருந்த காரணத்தினால் மூக்குப் பொடியின் சக்தியும், டெட்டால் திரவத்தின் சக்தியும் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆகவே, முருகேசனின் கால்களில் அட்டைப்பூச்சிகள் ஒட்டிக்கொண்டன. காலிலும், விரல் இடுக்குகளிலும் ஒட்டிக்கொண்ட அட்டைப்பூச்சிகள், பென்ஸ் கார் நிறுவனத்தின் குறியீடு போன்றே ஒரு துளையிட்டு, உடல்பெருத்து மயங்கிவிழுவதற்காக நன்றாக இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தன.
மாலைவேளை ஆனதும்,
பள்ளிக்குச் சென்ற குழந்தைகளை அழைத்துவர தாத்தா பெருமாள் சென்றுவிட, அதேசமயம் வேலைமுடிந்து தாங்கள் வரும்வழியில் கீழே கிடக்கும் விறகுத் துண்டுகளை பொறுக்கிக் கொண்டு முருகேசனும் சீதாவும் வீடு திரும்பினர். வீட்டில் அவர்களின் உடம்புவலியை போக்க யூகலிப்டஸ் மரத்தின் இலைகள் வெந்நீர் பாத்திரத்தில் மிதந்து கொண்டிருந்தன. பின்பு, இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த அட்டைப் பூச்சிகளை எடுத்து, அடுப்பினுள் எறிந்துவிட்டு குளிக்கச் சென்றார் முருகேசன்.
சில மணிநேரங்கள் சென்றதும் மின்வெட்டு நிகழ்ந்த அந்த இரவில், உணவை சீதா தயார் செய்து கொண்டிருக்க, அதற்கு மாமியார் உதவிபுரிந்து கொண்டிருந்தார். மறுபுறம், அப்பாவுடன் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பா! அப்பா! ஒரு கதை சொல்லுங்கப்பா...
கதையா?... என்ன கதை சொல்லணும்?...
ஏதாச்சும் ஒரு கதை சொல்லுங்க...
பாட்டி வடசுட்ட கதை சொல்லட்டுமா?...
இல்ல வேணாம்... அது பழைய கதை, எங்களுக்கு வேற கதை சொல்லுங்க...
சரி, அப்போ புதுசா இன்னொரு கதை சொல்றேன். கேளுங்க...
ஐ! புதுக் கதையா... ஜாலி! ஜாலி! சொல்லுங்கப்பா...
சொல்றேன் கேளுங்க, ஒரு ஊர்ல... ஒரு தமிழனும், ஒரு வெள்ளைக்காரனும் டிரெயின்ல போயிட்டு இருந்தாங்களாம்…
ம்...அப்புறம்,
அப்போ அந்த வெள்ளைக்காரன் தமிழன பாத்து, "வாட் இஸ் யுவர் நேம்னு?" கேட்டானாம். அதுக்கு அந்த தமிழன் "இது வாத்து இல்லீங்க, கோழின்னு சொன்னானாம்."
குழந்தைகள் சிரித்தவாறே அப்புறம் என கேட்க...
அப்புறம் அந்த வெள்ளைக்காரன், "வேர் ஆர் யூ கோயிங்ன்னு" கேட்டானாம். அதுக்கு அந்த தமிழன், "இது வேற யாரோட கோழியில்ல, என்னோட கோழின்னு சொன்னானாம்."
குழந்தைகள் மீண்டும் சிரித்தவாறே, அப்புறம் என கேட்க...
அப்புறம் அந்த வெள்ளைக்காரன் "ஆர் யூ மேடு-னு" கேட்டானாம். அதுக்கு அந்த தமிழன், "என்னது...என்னையவா மாடுன்னு சொல்ற! அப்டினு அந்த வெள்ளைக்காரன போட்டு அடி...அடின்னு அடிச்சானாம்” என பாவனைகளுடன் முருகேசன் சொல்லச் சொல்ல குழந்தைகள் கலகலவென்று சிரித்துக் கொணடிருந்தனர்.
'சிரிச்சது போதும், எல்லாரும் சாப்பிட வாங்க' -என்று சீதாவின் குரல் அனைவரையும் சாப்பிட அழைத்தது. அந்த இரவில் பல கதைகளை பேசிக்கொண்டே அவர்களின் உணவும் உள்நுழைந்தது. பின் அனைவரும் தரையில் படுக்கைகளை விரித்து உறங்கத் தயாராகினர். அப்போது சீதா,
"சின்னவனே, அம்மாக்கு காலுல குத்திருக்க முள்ளுங்கல கொஞ்சம் எடுத்து விடுடா"- என்று அழைத்தாள்.
அவனும், "பின்னூசி வேணுமேமா" என்றவாறே தலையை சொறிந்துகொண்டு நின்றான்.
பாட்டிக்கிட்ட கேளு...
பாட்டி, பின்னூசியிருந்தா குடு பாட்டி, அம்மாவுக்கு முள்ளு எடுத்துவிடனும்...
அச்சமயம் தன் தாலிக்கொடியில் இருந்த பின்னூசியை விடுவித்து வழங்கினாள் சாந்தி பாட்டி.
இந்தாடா பின்னூசி...
குடு பாட்டி...
அந்த மண்ணெண்ண வெளக்க பக்கத்துல எடுத்துவச்சு, முள்ள எடு...
சரி பாட்டி...
அம்மா! கால நீட்டு,
ம்...இந்தாடா தங்கம், பாத்து பொறுமையா எடு...
ரொம்ப வலிக்குதாம்மா?...
ஆமா சாமி...நெறைய முள்ளு குத்திருக்கு பாரு...
சரிமா...நான் உனக்கு வலிக்காம எடுக்குறேன், நீ இந்த பச்ச கலர பாத்துக்கோ… என்று அவன் வாஞ்சையாக சொல்ல, தன் குழந்தை மருத்துவரான சமயத்தில் வலியை பொறுத்துக் கொண்டிருந்தாள் சீதா.
அம்மா நீ கவலப்படாத, ஒருநாள் நானும் அண்ணனும் படிச்சு பெரிய டாக்டரா வருவோம். அப்போ, மழையில ஒழுகாத மாதிரி பெரிய...வீடு கட்டி, உன்னையும் அப்பாவையும் அப்புறம் தாத்தா, பாட்டி எல்லாரையும் நல்லா பாத்துக்குவோம், சரியா? இப்போ மட்டும் இந்த வலிய கொஞ்சம் பொறுத்துக்கோ, என்று வாஞ்சையாக கூறினான்.
இதைக்கேட்ட சீதாவின் மனது மட்டுமல்ல, அனைவரின் மனதும் மகிழ்ச்சிக்குள்ளாகி வீடெங்கும் ஆனந்த துளிகளை தெளித்தது. முட்கள் எடுக்கப்பட்ட பின்னர், அனைவரும் உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலை விடிந்ததும், வழக்கம்போல் தங்களது காலை உணவையும், மதிய உணவையும் கூடையில் எடுத்துக்கொண்டு, பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி பேசியபடியே, முருகேசனும் சீதாவும் காட்டுவழிப் பாதையில் எட்டுவைத்தனர்.
எழுத்து: ஆ.கிருஷ்ணதாஸ்
இடம்: கோவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக