இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஏப்ரல் 10, 2020

மரம் பேசுகிறேன்


ஏன் என்னை அழிக்க நினைக்கிறாய் மனிதா?
என் இனத்தின் அழிவு! உனக்கும் அழிவு
என்பதை மறந்துவிட்டாயா?

நீ ஆரம்ப கல்வி கற்க
தற்காலிக ஏடுகளின் காவலனாகவும்
நடுநிலை முதல் மேல்நிலை வரை
குறிப்பெடுக்கவும் பயன்பட்டேனே!

கரும்பலகையாய் உருவெடுத்து
உனதறிவை மேம்படுத்தும் தகவல்களை
என் முகத்திரையில் தோற்றமளிக்க செய்தேனே!

நீ “அ” என எழுதிய எழுதுகோலும் என் உடல் தானப்பா!

'அ' என்றால் அன்பின் தொடக்கம் என்று நினைத்தேன்!
ஆனால், இன்று உன்னால் 'அ' என்றால்
அழிவின் தொடக்கம் என எண்ணுகிறேன்!

சிறுவயதில் நீ உண்டு மகிழ்ந்த குச்சி மிட்டாயிலும்,
குச்சி ஐஸிலும், பஞ்சு மிட்டாயிலும்
என் தேகத்தை தானே செதுக்கி வழங்கினேன்!

உன் மகிழ்ச்சியை கண்டு கழித்த என்னை ஒட்டுமொத்தமாய் அழிக்க நினைத்து மீளாத்துயரத்தில் விழச்செய்கிறாயே?

அறிவிப்பு பலகையாய் பயன்படுத்தினாய்!
ஆனால், எவ்வித அறிவிப்பும் இன்றி அறுத்தெறிகிறாயே!

கில்லி என சொல்லி அடிக்கும் விளையாட்டிலும்,
எல்லை தாண்டும் மட்டை வீச்சிலும்,

தொலைக்காட்சி பாரம் தாங்கும் மேசையிலும்,
நீ ஆடிப்பாடும் ஊஞ்சலிலும்,

தொட்டில் தூக்கம் தரும் கட்டிலாகவும்,
சாய்ந்து அமர நாற்காலியாகவும்,

அடுப்பு எரிக்க விறகாகவும்,
துடுப்பு பயணத்தில் சிறகாகவும்,

ஏற்றம் தரும் ஏணியாகவும்
இப்படி சொல்லிக்கொண்டே போகும் விதமாய்
உன் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் உடனிருக்கின்றேனே!

உன்னோடு வாழ பிடித்த என்னை
மண்ணோடு வீழ்த்த நினைக்கின்றாயே?

மனிதா நான் வெளியிடும் ஆக்ஸிஜன்
உனக்கு உகங்ததில்லை என்று எண்ணினாயோ?

ஆக்ஸிஜன் உற்பத்தியில் என் பங்களிப்பு
இருப்பதை முற்றிலும் மறந்துவிட்டாயோ?

நீ இளைப்பாற நிழல் தருவது நான்!
ஒளிந்து விளையாட அடைக்கலம் தருவதும் நான்!
நீஅமரும் இருக்கையிலும் நான்!
பயணம் செய்யும் படகிலும் இருப்பது என் உடலே!
காகித கப்பலிலும் இருப்பது என் உடலே!

என்னை கரியாக்கி உன் வாழ்வில் கரி பூசிக்கொள்கிறாயே?
எனது கண்ணீர்க்குரல், உனக்காகத்தான் நான் இருக்கிறேன்
என்று உணர்த்தவில்லையா? 

வயது முதிர்ந்த என்னை வெட்டினாய் பொறுத்துக்கொண்டேன். ஆனால், வளரவேண்டிய எந்தன் இளங்கன்றுகளை பிஞ்சிலேயே வாடச் செய்யாதே!

“உன் வாழ்க்கை, வளர்ச்சிப்பாதையில் செழிப்படைய என் இன இளங்கன்றுகளை, வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற உறுதிமொழியோடு வளரச்செய்வாயாக” என்று உன்னிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

உன் வாழ்வின் தொடக்கத்தில் தொட்டில் கட்டும் பலகையாகவும், இறுதியில் உன்னை சுமந்து செல்லும் படுக்கையாகவும் நான் தான் உடனிருக்கின்றேன் என்பதை நினைவில் கொண்டு எங்கள் இன அழிவை தடுத்து உங்கள் இனம் வாழ வழிவகை செய்.

இப்படிக்கு
வேதனையில் வெட்டுண்ட மரம்...

2 கருத்துகள்: